சாலையில் கிடந்த கண்ணாடி துண்டுகளை கூட்டித் தள்ளிய பெண் போலீஸ் கான்ஸ்டபிள் – வைரலாகும் வீடியோ

21 January 2021, 11:25 am
Quick Share

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகர சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தால், அந்த சாலையில், கண்ணாடித்துண்டுகள் சிதறிக் கிடந்தன. அப்பகுதியை கடந்து செல்லும் மக்களும், வாகன ஓட்டிகளும் இதன்காரணமாக, மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.

பலரும் இதைப் பார்த்து மட்டும் கொண்டிருக்கையில், புனே மாதகர போலீசின் கடக் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் காவலர் அமல்தார் ராஸியா சயீத், துரிதமாக செயல்பட்டு சாலையில் கிடந்த கண்ணாடி துண்டுகளை அருகில் இருந்த உணவகத்தினர் வழங்கிய துடைப்பத்தால் கூட்டி அகற்றினார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அமல்தார் ராஸியா சயீத்தின் பணியை பாராட்டும் விதமாக, மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கும், இந்த வீடியோவை, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பொதுமக்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டிராத வகையில், அமல்தார் ராஸியா சயீத் மேற்கொண்ட பணி பாராட்டுதலுக்கு உரியது. குடிமக்களின் பாதுகாப்பிற்காக அவர் மேற்கொண்ட பணி முன்மாதிரியாகும் என்று அமைச்சர் அனில் தேஷ்முக், தான் பகிர்ந்த அந்த வீடியோவிற்கு தலைப்பு இட்டுள்ளார்.

இதுகுறித்து, அமல்தார் ராஸியா சயீத் கூறியதாவது, வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலி ஏற்படவில்லை. விபத்து நடந்த இடத்தில் சிதறிய கண்ணாடித்துண்டுகளால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்தே, நான் அந்த இடத்தை சுத்தம் செய்ததாக அவர் கூறினார்.

இந்த வீடியோ வைரல் ஆனதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாது, பொதுமக்களும், அமல்தார் ராஸியா சயீத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Views: - 0

0

0