திடீர் டெல்லி விசிட்..! உள்துறை அமைச்சரை சந்திக்கும் எடியூரப்பா..! கர்நாடக அரசியலில் நடப்பது என்ன..?

By: Sekar
10 January 2021, 2:43 pm
yediyurappa_updatenews360
Quick Share

கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, மாநிலத்தின் அரசியல் சூழ்நிலை குறித்தும், வரவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து விவாதிக்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

எனினும், மாநிலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து ஆலோசனை செய்யப்படுமா என்பதற்கு முதலமைச்சர் எடியூரப்பா எந்த பதிலும் வெளியிடவில்லை.

“கர்நாடகாவின் அரசியல் நிலைமை குறித்து நான் விவாதிக்கப் போகிறேன்” என்று முதல்வர் டெல்லியில் இறங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“சமீபத்தில், நாங்கள் கிராம பஞ்சாயத்து தேர்தலில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றோம். ஒரு மாத காலத்திற்குள், நாங்கள் இரண்டு நாடாளுமன்றம் மற்றும் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ளப் போகிறோம். நாங்கள் வேட்பாளர்களை இறுதி செய்ய வேண்டும். இந்த பிரச்சினைகள் அனைத்தையும் அமித் ஷாவுடனும் பிற முக்கியத் தலைவர்களுடனும் விவாதிப்போம்.” என்று அவர் கூறினார்.

உள்துறை அமைச்சருடனான சந்திப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கட்சியின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டாவையும் எடியூரப்பா சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே கர்நாடக பாஜக வட்டாரங்களில், எடியூரப்பா 75 வயதைக் கடந்த நிலையில் முதல்வர் பதவியில் நீடிப்பது, மத்திய தலைமைக்கு உடன்பாடில்லை என்பதால், விரைவில் அவரை மாற்றி, மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய வாடா கர்நாடக பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவியைத் தர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், தனது பதவியைத் தக்கவைக்கவும், அதற்கு வாய்ப்பில்லை எனும்பட்சத்தில், மகனுக்கு முக்கியப் பதவியைப் பெரும் நோக்கிலேயே, எடியூரப்பா அமித் ஷாவை சந்திக்கிறார் என பேசப்படுகிறது.

Views: - 62

0

0