நொய்டாவில் அமையவுள்ள நாட்டின் மிகப்பெரிய சினிமா நகரம்..! பாலிவுட்டுக்கு ஆப்படிக்கும் முடிவா..?

19 September 2020, 1:21 pm
Bollywood_Film_City_UpdateNews360
Quick Share

கௌதம் புத்தா நகர் மாவட்டத்தில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா என்ற இரட்டை நகரத்தில் நாட்டின் மிகப்பெரிய திரைப்பட நகரத்தை அமைக்க பொருத்தமான நிலத்தைக் கண்டுபிடிக்குமாறு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தி பேசும் மக்களை அதிக அளவில் கொண்டதாக வட இந்திய மாநிலங்கள் இருந்தாலும், இந்தித் திரைப்படங்கள் அனைத்தும் மகாராஷ்டிராவின் மும்பையை மையமாகக் கொண்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே என்ற சிவசேனாவின் முழக்கங்கள், பாலிவுட்டில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் ஆளுமை உள்ளிட்ட பல காரணங்களால் மும்பையில் செயல்படும் இந்தித் திரையுலகம் மாபியாவின் கையில் சிக்கியுள்ளதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. பீகாரைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்த விசாரணையை அடுத்து, இந்த விவகாரம் பூதாகமாகியுள்ளது.

இந்நிலையில் இந்தித் திரையுலகின் மையமாக உத்தரப்பிரதேசத்தை கொண்டு வரும் முயற்சியாக முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய சினிமா நகரத்தை உருவாக்கும் முனைப்பில் உள்ளார்.

இதையடுத்து மீரட், காஜியாபாத், புலந்த்ஷாஹர், ஹப்பூர், பாக்பத் மற்றும் கௌதம் புத்தா நகர் மாவட்டங்களை உள்ளடக்கிய மீரட் பிரிவில் வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் முதல்வர் இதை வலியுறுத்தியுள்ளார்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான மத்திய இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் மற்றும் உ.பி. சுகாதாரத்துறை அமைச்சர் அதுல் கார்க், பல மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல்வர், மறுஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, ​​நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிக அழகான திரைப்பட நகரத்தை கௌதம் புத்தா நகரில் அமைக்க உள்ளதாக அறிவித்தார்.

“நொய்டா, கிரேட்டர் நொய்டா அல்லது யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் அல்லது அதைச் சுற்றியுள்ள பொருத்தமான இடத்தில் நிலத்தை கண்டறிய, ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.” என்று உத்தரபிரதேச அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சினிமா நகரம் கட்டமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்போது, மும்பை பாலிவுட்டுக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 1

0

0