மொழியால் சந்திக்கு வந்த சொமேட்டோ : தமிழர்களின் எதிர்ப்பு எதிரொலியால் பங்குகள் சரிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 6:25 pm
Zomato Shares down -Updatenews360
Quick Share

தமிழர்களின் எதிர்ப்பு எதிரொலியால் தேசிய பங்குச்சந்தைகளில் சொமேட்டோவின் பங்குகள் சரிவடைந்தன.

தமிழகத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவர் டெலிவரி தொடர்பாக எழுந்த பிரச்சனையின் காரணமாக சொமோட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தை அணுகியுள்ளார். அப்போது, ‘இந்தி நாட்டின் தேசிய மொழி என்றும், ஆகவே அனைவரும் இந்தி மொழி கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது பொதுவானது’ என சொமேட்டோ ஊழியர் பதிலளித்துள்ளார்.

ஊழியரின் இந்த பதில் கடும் சர்ச்சையான நிலையில், சொமேட்டோவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, #Reject_Zomato என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் செய்யப்பட்டது. இதனால், உடனடியாக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட Zomato நிறுவனம், சம்பந்தப்பட்ட ஊழியரை பணிநீக்கம் செய்ததுடன், உணவு மற்றும்‌ மொழி ஒவ்வொரு மாநிலத்தின்‌, கலாச்சாரத்தின்‌ இரண்டு அடித்தளங்கள்‌ என்பதை புரிந்து கொண்டதாக விளக்கமும் அளித்திருந்தது..

இந்த நிலையில், இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், Zomato நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது :- எங்களின் உணவு சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்திலிருந்து யாரோ ஒருவர் செய்த தவறு தேசிய பிரச்சனையாக மாறிவிட்டது. இந்த ஒரு காரணத்திற்காக அவரை பணியில் இருந்து விடுவிப்பது ஏற்புடையதல்ல. அவரை மீண்டும் பணியில் சேர்ப்போம். இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல அவருக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

எங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள். பிராந்திய மக்களின் உணர்வுகளையும், மொழியின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளும் அளவிற்கு யாரும் நிபுணர்கள் அல்ல. நானும்தான். நாம் மற்றவருடைய குறைகளை பொறுத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடையே மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இந்தியாவை நேசிப்பது போல, நாங்கம் தமிழகத்தையும் நேசிக்கிறோம். கூடுதலாகவோ, குறைவாகவோ அல்ல. நாம் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற ஊழியர் அறிவுறுத்திய நிலையில் தமிழர்களின் எதிர்ப்பு எதிரொலியால் தேசிய பங்குச்சந்தையில் சொமேட்டோ நிறுவன பங்குகள் 3 சதவீதத்திற்கு மேல் சரிந்தன.

வர்த்தக நாளின் தொடக்கத்தில் 144.80 ரூபாய் என்றிருந்த சொமேட்டோவின் பங்குகள் வர்த்தக நாளின் முடிவில் 4.45 ரூபாய் குறைந்து பங்கின் விலை 139.60 ரூபாயாக குறைந்துள்ளது. இதன் மூலம் 3.09 சதவீதம் அளவுக்கு பங்குகள் சரிந்துள்ளது.

Views: - 245

0

0