பல கோடி பணமோசடி புகார்.. விசிக கவுன்சிலர் வீட்டில் போலீசார் ரெய்டு.. முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தகவல்.!!

Author: Babu Lakshmanan
12 July 2022, 5:20 pm
Quick Share

தனியார் நிதி நிறுவனத்தின் மீதான பல கோடி மோசடி புகார் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் பல முக்கயி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் அதிகாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னனி மாநில துணை செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி 17வது வார்டு மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன் இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல, வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரில் உள்ள அவரது உறவினர் மாமியார் வீட்டில் கடலூர் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது, மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் வீட்டில் இல்லை.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 18க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருளாதார குற்ற தடுப்புப்பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நிறுவன இயக்குனர் ராஜா மற்றும் ரமேஷ்குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, சோதனை மேற்கொள்ளப்பட்ட பிரபாகரன் ஏற்கனவே எல்பின் நிறுவனத்தில் ஏஜெண்டாகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் வீட்டில் காலை 8:30 மணி அளவில் துவங்கிய சோதனையானது மதியம் சுமார் 1.30 மணி அளவில் நிறைவுபெற்றது.

தொடர்ந்து வெளியே வந்த அதிகாரிகள் சில ஆவணங்கள் சோதனையில் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரபாகரன் மற்றும் அவரது மனைவியின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், பழைய செல்போன், கார் ஆவணங்களையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

Views: - 471

0

0