நாளை நீட் தேர்வு.. இன்று மேலும் ஒரு மாணவி தற்கொலை… தமிழகத்தில் தொடரும் சோகம்…!!!

Author: Babu Lakshmanan
16 July 2022, 11:21 am
Quick Share

அரியலூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதேவேளையில், நீட் தேர்வினால் என்ன பயன் என்பதை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விளக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி என்ற ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றும், ஆட்சிக்கு வந்தால் திமுகவின் முதல் கையெழுத்து, நீட் தேர்வை ரத்து செய்வது தான் என்று திமுக தலைவர்கள் உறுதியளித்து வந்தனர்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த ஒன்னே கால் வருடம் ஆகிவிட்ட நிலையிலும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டமுன்வடிவு குடியரசு தலைவர் பரிசீலனையில் இருந்து வந்தாலும், தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை தொடர்ந்து கொண்டே இருப்பது கல்வியாளர்களுக்கு வேதனை அளிக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், இன்று அரியலூரில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ரயில்வே காலனி தெருவைச் சேர்ந்தவர் நடராஜனின் மகள் நிஷாந்தினி. 12-ஆம் பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து, நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த அவர், நாளை நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட மாணவி நிஷாந்தினி, நீட் தேர்வை இரண்டாவது முறையாக எழுதத் தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், மாணவி தன் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 692

0

0