தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்த 696 பேர் வீடுகளிலேயே இருக்க அறிவுறுரை…

23 March 2020, 5:30 pm
Quick Share

ஈரோடு: கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்த 696 பேர் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை மாவட்ட ஆட்சியர் கதிரவன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொரோனா சிகிச்சைக்காக முழுவதுமாக மாற்றம் செய்திருப்பதாக கூறினார். கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டினருடன் சேர்த்து இதுவரை 15 பேர் தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் 169 வீடுகளை சேர்ந்த 694 நபர்கள் தனிமைபடுத்தி வீடுகளில் இருக்க அறிவுறுத்தியிருப்பதாகவும், தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தை முடக்கும் நடவடிக்கை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை என்றும் மாலை இது குறித்து தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். வதந்தி பரப்பிதாக கோபிச்செட்டிபாளையத்தில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறினார்.

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் பேருந்து நிலையத்தை அடைந்தவுடன் கட்டாயம் கைகளை கழுவ வேண்டும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். முககவசங்கள் தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறிய மாவட்ட ஆட்சியர் கதிரவன், காய்கறி மார்க்கெட்டில் மக்கள் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.