மூன்று நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட மாணவன் சடலம்…

19 March 2020, 6:38 pm
Quick Share

கிருஷ்ணகிரி: மத்தூரை அருகே கல்குவாரியில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மாணவனின் உடல் மூன்று நாட்கள் பிறகு மீட்கப்பட்டது.

மத்தூரை அடுத்த நாகம்பட்டியில் உள்ள தனியார் கல்குவாரி அருகே இன்று காலை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் சென்றபோது சுமார் 100 அடி பள்ளம் கொண்ட குல்குவாரி குட்டையில் மாணவனின் உடல் மிதப்பதை கண்டு மத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திலிருந்த உடை மற்றும் புத்தகப்பையிலிருந்த அடையாள அட்டையை வைத்து இறந்த மாணவனை கண்டறிந்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மத்தூரை அடுத்த கெட்டம்பட்டியை சேர்ந்த மாதேஸ் மகன் சஞ்சைகுமார் என்பதும், இவர் மத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருவதும், கடந்த 16ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவன் திரும்ப வில்லை. பல இடங்களில் தேடி வந்த நிலையில் இன்று கல்குவாரியில் பிணமாக மீட்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரிக்கையில், சஞ்சைகுமார் கடந்த திங்களன்று சக மாணவர்கள் நான்கு பேருடன் கல்குவாரி பகுதியில் குளிக்க வந்ததாகவும், அப்போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே முழு விபரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு இதே கல்குவாரி குட்டையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு உயிரிழப்பு நடந்துள்ளது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.