கடலில் மூழ்கி காணாமல் போன மீனவரை கண்டுபிடித்து தரக் கோரிய வழக்கு… மத்திய அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…

31 July 2020, 4:40 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி காணாமல் போன மீனவரை கண்டுபிடித்து தரக் கோரிய வழக்கில் மத்திய அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஜூலை 24ஆம் தேதி காலை 4 மணி அளவில் 5 மீனவர்கள் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர் மாலை 5 மணி அளவில் தேன்காய்பட்டினம் துறைமுகம் அருகே வீடு திரும்பியபோது மிகப்பெரிய அலையில் சிக்கிய படகில் இருந்த 5 நபர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 4 மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில் ஷிப்பு என்பவர் கடலில் மூழ்கிய மாயமானார். மேலும் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி இரண்டு விபத்துகளில் ஷிப்பு உட்பட 2 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். எனவே காணாமல் போன மீனவரை கண்டுபிடிப்பதற்கு விமான படை, கப்பல் படை கொண்டு தேடுதல் நடத்த உத்தரவிட வேண்டும்.

மேலும் மீனவரை கண்டு பிடித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து மனுதாரர் தரப்பில் மீனவரை மீட்பதற்கு ஹெலிகாப்டர் கப்பல் படையினர், நீச்சல் வீரர்கள் கொண்டு தேடுதல் வேட்டை நடத்தி கண்டுபிடித்து தர வேண்டும் என கூறினார். அரசு தரப்பில் அடையாளம் தெரியாத நபரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் ஆனால் இரண்டு மீனவர்களின் குடும்பத்தினருக்கும் அடையாளம் தெரியாததால் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளது எனக் கூறினார். நீதிபதிகள் கூறும்போது இந்த வழக்கு குறித்த நிலை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஒத்தி வைத்தார்.