கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு…

22 March 2020, 5:46 pm
Quick Share

ஈரோடு: சிவகிரி அருகே வழி தவறி வந்து கிணற்றில் விழுந்த மானை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிவகிரி அடுத்த தாண்டாம்பாளையம் அருகே உள்ள ஒத்தப்பனை பகுதியைச் சேர்ந்த சிவபாலகுமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று காலை வழிதவறி வந்த புள்ளிமான் மேய்ந்து கொண்டிருந்தது. தோட்டத்தில் கட்டியிருருந்த நாய் மேய்ந்து கொண்டிருந்த மானை பார்த்து குரைத்ததால் தப்பியோட முயற்சித்த மான் அருகில் இருந்த கிணற்றில் விழுந்தது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிவகிரி காவல்துறைக்கும், அரச்சலூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அரச்சலூர் வனக்காப்பாளர் கோபால், பெருந்துறை வனக்காப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் கிணற்றில் விழுந்த மாலை மீட்டனர். பயத்தில் கிணற்றில் விழுந்த மானுக்கு கொம்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கந்தசாமிபாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து பின்னர் காயம் ஆறும் வரை வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் வைத்து சிகிச்சை அளித்து காயம் ஆறிய பின் அரச்சலூர் வனச்சகத்திற்குட்பட்ட காப்பு காட்டில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.