மனைவி திட்டியதாக காவல் நிலையத்தில் கணவர் புகார்… புகார் ஏற்க மறுத்தால் தற்கொலை முயற்சி…

30 June 2020, 9:15 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கூலித் தொழிலாளியை சந்தேகப்பட்டு மனைவி திட்டி மன உளைச்சல் ஏற்படுத்தியதாக மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தவரின் புகாரை ஏற்காததால் மது போதையில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரஞ்சித்குமார். இவர் தனது மனைவி ஜெயலட்சுமியுன் பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததால் போதிய வருமானம் இல்லாததால் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக இவர் மீது மனைவி தொடர்ந்து சந்தேகப்பட்டதாகவும், தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறி திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்க வந்திருந்தார். மது போதையில் இருந்த அவரின் புகார் மனுவை போலீசார் ஏற்காததால் காவல் நிலையம் அருகே இருந்த சுமார் 60 அடி உயரம் உள்ள செல்போன் கோபுரத்தில் திடீரென ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவரது மனைவி ஜெயலட்சுமி, இவரது மகள் கயல்விழி, மகன் கலைச்செல்வன் ஆகியோரை அழைத்து வந்த திருப்பாலைவனம் போலீசார் செல்போன் கோபுரத்திலிருந்து அவரைக் கீழே இறக்க சமரசம் மேற்கொண்டதை தொடர்ந்து பின்னர் காவல்துறையினர் எழுத்துப்பூர்வமாக புகாரை ஏற்க உறுதி அளித்ததால் ஒரு மணி நேரம் சமரசத்திற்கு பின் அவரை கீழே பத்திரமாக இறக்கினர். தீயணைப்பு துறை அதிகாரிகள் உடன் போலீசார் அவரை அழைத்துச் சென்று செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையம் அருகிலேயே செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.