கெமிக்கல் ரசாயன குடோனில் தீ விபத்து… பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனம் தீயில் கருகி நாசம்…

27 June 2020, 4:42 pm
Quick Share

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே உள்ள தனியார் கெமிக்கல் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனம் தீயில் கருகி நாசம் அடைந்தது.

செங்குன்றம் மாதவரம் நெடுஞ்சாலை அருகிலுள்ள ஜமுனா நகரில் தனியாருக்கு சொந்தமான கெமிக்கல் ரசாயன குடோன் இயங்கி வந்தது. ஊரடங்கு காரணமாக அங்கு பணிகள் நடைபெறவில்லை. இதனால் ஊழியர்கள் யாரும் இல்லை காவலாளி மட்டும் பணியில் உள்ளார். இந்நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென எரிந்தது. சற்றும் எதிர்பாராத கம்பெனியின் காவலாளி மற்றும் பொதுமக்கள் பார்த்தவுடன் செங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் செங்குன்றம் தீயணைப்புத்துறை மற்றும் மாதாவரம் மணலி அம்பத்தூர் கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 6 வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் கிரான்ட் லைன் வடகரை, வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் கண் எரிச்சலில் அவதிப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான கெமிக்கல் பொருட்கள் எரிந்து நாசமாகியது.