அன்னையின் 46 வது நினைவு நாள் இன்று அரவிந்தர் ஆசிரமத்தில் அனுசரிப்பு
17 November 2019, 12:37 pm
புதுச்சேரி: அன்னையின் நினைவு நாளையொட்டி, அரவிந்தர் ஆசிரமத்தில் ஏராளமான சீடர்கள் வருகை தந்து மலர் தூவி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியை அடுத்த ஆரோவில், சர்வதேச நகரை அமைத்த அன்னை. பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 1878 பிப்ரவரி மாதம் 21-ம் தேதி பிறந்தார். அன்னையின் இயற்பெயர் மிர்ரா அன்போன்ஸா ஆகும். சிறிய வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அன்னை, அரவிந்தரின் ஆன்மீக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1914-ல் புதுச்சேரி வந்தார். அன்னையின் பெரும் முயற்சியால் தான் புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமும், ஆரோவில் சர்வதேச நகரமும் தோற்றுவிக்கப்பட்டன.
கடந்த 46 வருடங்களுக்கு முன் இதே நாளில் அரவிந்தர் ஆசிரமத்தில் காலமானார். அவருக்கு ஆசிரமத்திலே சமாதி நிறுவப்பட்டது. வருடாவருடம் அன்னையின் சீடர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள் அது போல இன்றும் காலை முதல் அரவிந்தர் ஆசிரமத்தில், அன்னை வசித்த அறை சீடர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. மேலும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னை சமாதியை பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பின்னர் கூட்டு தியானமும் மேற்கொண்டனர். இதையொட்டி அங்கு போலிசார் பாதுகாப்பு பணியில் இடுப்பட்டுள்ளனர்.