நெல்லையப்பா் கோவிலில் சொக்கப்பனை தீபம் மற்றும் காா்த்திகை ருத்ர தீபம் ஏற்றப்பட்டது

10 December 2019, 11:04 pm
Nellai Deepam-Updatenews360
Quick Share

நெல்லை: நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் கோவிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சுவாமிக்கு சொக்கப்பனை தீபம் மற்றும் அம்பாளுக்கு காா்த்திகை ருத்ர தீபம் ஏற்றப்பட்டது.

தென் மாவட்டங்களில் புராதன சிறப்புமிக்க நெல்லையப்பர் கோவில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன. முன்னொரு காலத்தில் வேதசர்மா இறைவனுக்கு திருவமுது படைக்க காயப்போட்டிருந்த நெல் மழையினால் நனையாத படி வேலியிட்டுக் காத்த இறைவன் நெல்வேலி நாதா் என சிறப்பு பெயா் பெற்று ஊருக்கு திருநெல்வேலி என பெயா் வரக்காரணமானவா்.

அகத்திய முனிவருக்கு திருமணக்கோலம் காட்டிய மேன்மையுடையதாகும்.தாருகாவனத்து முனிவர்கள் செருக்கினை அடக்கிய புகழை உடையதும், பால்குடம் சுமந்து சென்ற இராமக்கோன் என்ற அன்பரை இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறிவிட்டு பாலை தன்மேல் கவிழச்செய்து அதனால் வெட்டுண்டு காட்சியருளிய பெருமையுடையதும், திக்கெல்லாம் புகழறும் திருநெல்வேலி என்று திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற பெருமையுடையதும், பஞ்ச சபைகளில் தாமிர சபை இங்கு அமைந்திருப்பதும் ஆகிய பற்பல சிறப்புகள் நிறைந்த இப்புண்ணிய திருத்தலத்தில் காா்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக 2 தினங்கள் நடைபெறுகின்றது.

திருவிழாவினை ஒட்டி திருக்கோவிலில் நேற்று மாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று காலையில் சிறப்பு அபிஷேகம் சுவாமி அம்பாளுக்கு நடைபெற்றது. மாலையில் விநாயகா், முருகன் மற்றும் சுவாமி அம்பாள் வௌ்ளி ரிஷப வாகனத்தில் ஏழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்தனா். குடைவாயில் தீபாராதனைக்கு பிறகு இரவில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி தொடங்கியது. கோவிலின் முன் அமைக்கப்பட்ட சொக்கப்பனை முன்பு விநாயகா், முருகன் மற்றும் சுவாமி அம்பாள் ஏழுந்தருள பரணி தீபத்திலிருந்து தீபம் கொண்டுவந்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அதைப்போல் அம்பாள் சன்னதி முன்பு காா்த்திகை ருத்ர தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.