தித்திக்கும் தீபாவளி

14 November 2020, 5:00 am
Quick Share

தீபாவளி அமாவாசை அன்று லட்சுமி பூஜையானது கடைபிடிக்கப்படுகிறது. அன்று பெண்கள் முறையாகக் குளித்து, தங்கள் வீடுகளை இம்மி அளவு கூட அழுக்கில்லாமல் துப்பரவு செய்து தூய்மையைப் பெரிதும் விரும்பும் தெய்வமான லட்சுமியை வீட்டுக்கு வரவழைக்கிறார்கள்.

அதன் வாயிலாக நன்மையையும், வளத்தையும் வீட்டிலுள்ள எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்ய இந்த லட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது. அன்று வீட்டின் முற்றங்கள், தாழ்வாரங்களிலெல்லாம் அழகான கோலங்கள் / ரங்கோலிகள் முதலியவை இடப்பட்டு பொலிவூட்டப்படுகின்றன.
.
லட்சுமி தேவி வரும் வழியெல்லாம் பிரகாசமாக இருக்க வேண்டுமென்ற நம்பிக்கையில் வீட்டைச் சுற்றி விளக்குகளை வரிசை வரிசையாக அடுக்கி வைத்து பெண்கள் மகிழ்கிறார்கள். வீட்டிலுள்ள பெண்கள் லட்சுமி தேவியாகக் கருதப்படுவதால், அவர்கள் பட்டு ஆடைகள் உடுத்தி, தங்க வளையல்களையும், தங்கச் சங்கிலிகளையும், பொன் ஆரங்களையும் அணிந்து லட்சுமி அவதாரமாகவே மாறிவிடுகிறார்கள்.

இந்த லட்சுமி பூஜை தொடக்கம் விநாயக வழிபாடாகும். முதற் கடவுளாகிய விநாயகப் பெருமானை வழிபட்டு இந்தப் பூஜை தொடங்குகிறது. பொதுவாக எல்லா ஹிந்துப் பண்டிகைகளுமே விநாயக வழிபாட்டோடு தொடங்குவதுதான் வழக்கம். விநாயகரின் அளப்பரிய சக்தியால் எல்லாத் தடைகளையும் மக்களகர சதுர்த்தி நாயகனாகிய விநாயகப் பெருமான் உடைத்தெறிந்து தன்னுடைய பக்தர்களுக்கு வேண்டும் அருளையெல்லாம் வழங்குவார்.

மேலும், எடுத்த காரியங்கள் எல்லாம் இனிதே நிறைவேற்றிக் கொடுக்கும் தெய்வமாக விநாயகர் அமைவதால், விநாயகர் வழிபாடு முதலிடம் பெறுகிறது.அதனைத் தொடர்ந்து லட்சுமி வழிபாட்டுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முதலில் ஒரு புத்தம் புதிய பட்டுத் துணியை மரத்தினாலான மேடையில் விரித்து அதில் கொஞ்சம் நெல் மணிகளைப் பரப்பி, அதன் மேல் கலசம் வைக்கப்படுகிறது.

இந்தப் புனிதக் கலசம் வழக்கமாக வெள்ளியினால் ஆனதாக இருக்கும். அதன் மீது குங்குமம், மஞ்சள், பொட்டு இட்டு பூக்களால் அலங்கரிக்கப்படும். இந்த கலசத்தின் உள்ளே முக்கால் பங்கு மஞ்சள் நீரால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் உள்ளே தங்க நாணயங்களையும் நெல் மணி அல்லது அரிசியைப் போட்டு வைப்பார்கள். அதன் பிறகு மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு அந்தக் கலசத்தின் வெளிப்புறத்தில் நூலால் வலைப்போன்று அழகுறச் சுற்றி அலங்கரிப்பார்கள்.

கலசமாகிய அந்தச் சொம்பின் வாய்ப் பகுதியில் தேங்காயும், அதைச் சுற்றி மாவிலைகள் செருகப்படும். இந்தக் கலசம் வளத்தையும், புனிதத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அதற்கு எதிரில் வழிபாடு செய்வதற்கான லட்சுமி தேவியின் சிலை வைக்கப்பட்டு அது மஞ்சள் நீர், பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும்.
அதற்குப் பின்னர் லட்சுமி தேவியின் சிலை அழகாக ஜோடிக்கப்படும்.

பூக்கள், பழங்கள், பூஜைப் பொருள்கள், தங்க நாணயங்கள், வீட்டில் காலம் காலமாக சேமிக்கப்பட்டிருக்கும் தங்கக் காசுகள் ஆகியவற்றுடன் வியாபாரக் கணக்குகளுக்கான குறிப்பேடுகள், புத்தகங்கள் போன்றவற்றையும் அதன் எதிரில் அழகாக அடுக்கி வைத்து வழிபாடு செய்வார்கள். அதன் பின்னர் குத்துவிளக்கு ஏற்றப்படும்.

லட்சுமி பூஜைக்கென்று உள்ள சிறப்பு மந்திரங்களை ஓதி லட்சுமி தேவியை மகிழ்வித்து, அதன் மூலம் நிறைந்த செல்வமும், வணிகத்தில் லாபமும் முழுமையாகக் கிடைப்பதற்கு லட்சுமி தேவியின் அருளை வேண்டி வழிபாடு செய்வார்கள். இந்தப் பூஜை முடிந்ததும் சுவாமிக்குப் படைத்த இனிப்புகள், பிரசாதங்கள் ஆகியவற்றை அனைவருக்கும் வழங்கி மகிழ்வார்கள்.

பின்பு நிறைந்த மன திருப்தியோடு தங்கள் வாழ்க்கையில் எடுத்த காரியங்கள் யாவும் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கையோடும், மனநிறைவோடும் அவரவர் தங்களுடைய பணிகளுக்குத் திரும்புவார்கள்.

Views: - 76

0

0