தெய்வீகம் மணக்கும் தொட்டி கோவில்

By: Udayaraman
15 October 2020, 5:00 am
Quick Share

ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணத்திற்காக மதுரை அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் இங்கு வந்தார். அப்போது மலை மீது நின்ற கோலத்துடன் இங்குள்ள முனிவர்களுக்கு அருள்பாலித்தார். கள்ளழகர் இந்த காட்டிற்கு வந்ததால் காட்டழகர் என்று அழைக்கப்படுகிறார். பெருமாளின் திருவருள் வேண்டி சுதபா முனிவர் திருமாலிருஞ்சோலையில் தவம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக துர்வாசர் முதலிய முனிவர்கள் வந்தனர்.

சுதபா முனிவர் நூபுரகங்கைக்கு சென்று நீராடிவிட்டு ரிஷிகளை பூஜிக்க தேவையான பொருட்களோடு வந்தார்.
சுதபா முனிவர் தாமதமாக வந்ததால் கோபம் கொண்ட துர்வாசர் சுதபா முனிவரை நோக்கி தவளையாக தண்ணீரிலேயே இரும் என்று சபித்தார். சுதபா முனிவர் இந்த காட்டழகர் கோவிலுள்ள நூபுர கங்கையில் நீராடி சாப விமோசனமடைந்தார். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கோவில் கட்டப்பட்டது.

இதை இங்குள்ள கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. அதன் பிறகு அர்த்த மண்டபம் நாயக்க மன்னர் காலத்தில் வீரபாண்டிய நாயக்கரால் கட்டப்பட்டுள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த செண்பகத்தோப்பு என்ற இடத்தில் இருந்து காட்டுப்பாதையில் உள்ள இக்கோவில் மலைமேல் உள்ளதால் 247 படிகள் ஏறி கோவிலை அடைய வேண்டும். இந்தப் படிக்கட்டுகள் அனைத்தும் தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை 247 என்பதைகுறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலின் அருகே நூபுர கங்கை தீர்த்தத் தொட்டி உள்ளது. ஆண்டு முழுவதும் நீரூற்று மூலமாக தண்ணீர் ஒரே அளவாக வந்து கொண்டே இருக்கிறது. இந்தத் தீர்த்தத்திலிருந்து தண்ணீர் எடுத்துதான் அனைத்து பூஜைகளுக்கும் பயன்படுத்தப் படுகிறது. கடும் வறட்சியானாலும் நூபுர கங்கை தீர்த்தத்தில் தண்ணீர் வற்றாமல் இருப்பது அதிசயமாகக் கருதப்படுகிறது. இராஜபாளையம் ராஜுக்கள் இக்கோவிலை “தொட்டி கோவில் ” என்றே அழைக்கிறார்கள். பலருக்கு இந்த கோவில் குலதெய்வ கோவிலாக இருக்கிறது.

இங்குள்ள அன்னதான மண்டபத்தில் பக்தர்களுக்கு பெருமாள் பிரசாதம் கிடைக்கும். கைங்கரியம் செய்ய இராஜபாளையம் மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பெருமளவில் வருகை தருகிறார்கள். நீங்களும் காட்டழகரை சேவித்து அவரின் திருவருளை பெறவும்

Views: - 58

0

0