நாகதோஷம் நீக்கும் மதன கோபாலர்
17 August 2020, 5:00 amஒவ்வொரு தெய்வமும் வழிபாட்டு பலன் தருவதில் வேறுபட்டவை. நாம் அதை உணர்ந்து நமக்கு வேண்டிய பலன்கள் தரும் தெய்வங்களை வழிபடுவது நமக்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும். அந்த வகையில் மதுரை மாநகரில் மேலமாசி வீதி தெற்கு மாசி வீதி சந்திக்கும் இடத்தில் பாமா ருக்மணி சமேதராக வீற்றிருந்து தேடி வரும் பக்தர்களுக்கு எல்லாம் அருள் பாலிக்கும் மதன கோபால்சாமி திருக்கோவில் உள்ளது.
இங்கு பெருமாள் மூலவராக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மேலும் விமானத்தில் இருந்த கோலத்திலும் சயன கோலத்திலும் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. மூலவர் வேணுகோபாலன்; மன்மதனின் அழகை விட சிறந்து விளங்குபவர் என்பதால் அவரை மதன கோபாலன் என்று அன்போடு அழைக்கின்றனர்.
இந்த கோவில் நாகதோஷம் போக்கும் மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. ஒரே சிலையின் முன்புறமும் பின்புறமும் மகிமை பெற்ற நாகங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் கொண்டுள்ளன. ஒரு பக்கம் சிவன், பார்வதி, பிள்ளையார்,முருகன் மறுபக்கம் பெருமாள், லட்சுமி ,கருடன் காட்சி தரும் அழகே அழகு.
இந்த அதிசய நாகருக்கு பால் முழுக்கு நடத்தினால் தோசம் நீங்கும்; நன்மை கிடைக்கும் என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர். வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் பால் முழுக்கு நடைபெறுகிறது. எல்லோரும் கலந்து கொள்ளலாம். 11 மணிக்குள் பால் கொண்டு வந்து கொடுத்து விட வேண்டும்.
நாகதேவர் அடுத்து கலைவாணி அமர்ந்து அருள் புரிகிறார். அடுத்து நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது. பொதுவாக சைவ தலங்களில் தான் நவக்கிரக சந்நிதி காணப்படும். இங்கே பெருமாள் கோவிலில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நாகதோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலின் வழிபட்டு பயன் பெறலாம்.
0
0