தினம் ஒரு திருக்கோவில் : மகிழ்ச்சி ஊட்டும் மகாமக குளம்

5 August 2020, 5:00 am
Quick Share

கும்பகோணத்தை சுற்றியுள்ள மக்கள் மனதில் உற்சாகத்தோடும் பக்தி பெருக்கோடும் கொண்டாடுகிற திருவிழா மகாமகம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பரவசத்தோடு தங்களை புதிதாக உணர்கிற பக்தி பெருவிழா மகாமகம். அத்தகைய மகாமக குளம் உருவாகக் காரணமாக அமைந்த தலம் கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோவில். கும்பகோணம் பாணாத்துறையில் இந்தக் கோவில் உள்ளது. ஒருமுறை உலகம் அழிந்த காலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.

அதில் பிரம்மனால் மிதக்க விடப்பட்ட அமுத குடத்தை வேடன் வடிவில் வந்த சிவன் ஒரு பாணத்தால் உடைத்தார்.
சிவன் பாணம் தொடுத்த இடம் என்பதால், அந்த இடத்திற்கு பாணாத்துறை எனப் பெயர் ஏற்பட்டது.இங்கு கோவில் எழுப்பப்பட்டு, சிவனுக்கு பாணபுரீஸ்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டது. சிவன் குடத்தை உடைத்ததும், அதிலிருந்த அமுதம் பெருகி மகாமக குளமாக வடிவெடுத்தது. சாகா மருந்தான அமுதத்தையே குளமாக்கி தந்த பாணபுரீஸ்வரரை வணங்குபவர்களுக்கு நீண்ட ஆயுளும், அழியாத புகழும் உண்டாகும்.

இராமரின் ஆசானான வியாச முனிவர் ஒருமுறை நந்திதேவரிடம் சாபம் பெற்றார். மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி பாணபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்தார். சிவலிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார்.வியாசர் வணங்கியதால் இதற்கு வியாசலிங்கம் என பெயர் ஏற்பட்டது. வங்க தேசத்து அரசனான சூரசேனன் தன் மனைவி காந்திமதிக்கு இருந்த தீராத நோயை போக்குவதற்கு சூத முனிவரின் யோசனைப்படி, இங்கு வந்து தங்கி திருப்பணி செய்தான். அவளது நோய் தீர்ந்து மகப்பேறும் கிடைத்தது.

இங்கிருக்கும் அம்பிகையை சோமகலாம்பாள் என்பர். இவளை வழிபட்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
மகாமகத்தன்று பாணபுரீஸ்வரர் மகாமக குளத்திற்கு எழுந்தருள்வார். கும்பேஸ்வரர் கோவிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் இவரது இருப்பிடம் உள்ளது. அலைஅலையாய் பக்தர்கள் அலைமோதும் இந்த திருத்தலத்தில் நமது பாதம் படுவது புண்ணியம். வாருங்கள் மகாமக குளத்தில் நீராடி பாணபுரீஸ்வரர் அன்பிற்கு ஆட்படுவோம்.

Views: - 14

0

0