அருள்பொங்கும் ஊன்றீஸ்வரர் திருக்கோயில்

Author: Udayaraman
2 October 2020, 5:00 am
Quick Share

சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை வைத்துக்கொண்டு தடுமாறியபோது, அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டிச் செல்வதற்காக கிளம்பினாள். ஆனால், சிவன் தடுத்து விட்டாராம். இதனை உணர்த்தும் விதமாக அம்பாளின் இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது. பின் அம்பாள் சுந்தரரிடம், மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ்வினைகளுக்கேற்பவே நிகழ்கிறது. தற்போது கண்கள் பறிக்கப்பட்டிருப்பதும் ஒரு ஊழ்வினைப்பயனே. எனவே, கலங்காது செல்லுங்கள்.

 தகுந்த காலத்தில் அவர் அருளால் பார்வை கிடைக்கும் என்று தாய்மை உணர்வுடன் இனிய சொற்கள் பேசி சுந்தரரை சாந்தப்படுத்தினாள். மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழிகாட்டினாளாம். இதனால் அம்பாள் மின்னொளி அம்பாள் என்றும், கனிவாய்மொழிநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த அம்பாள் மிகவும் வரப்பிரசாதியானவள்.

 வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவர்கள், மன உளைச்சலால் அவதிப்படுபவர்கள், குடும்பம், தொழிலில் விருத்தி இல்லாதவர்கள் சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் மன அமைதியும், வாழ்க்கையின் மீது விருப்பமும் வரும் என்கிறார்கள். வாழ்க்கையே இருண்டுவிட்டதாக கவலையில் இருப்பவர்களுக்கு அம்பாள் ஒளி கொடுத்து வாழ வைக்கிறாள் என்பது நம்பிக்கை. பொதுவாக தங்கள் மீதே நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கை தந்து அவர்களை வாழவைக்கும் தலமாக இக்கோயில் திகழ்கிறது. எனவே, இக்கோயிலை நம்பிக்கை கோயில் என்றும் சொல்கின்றனர்.

சிவன் கிழக்கு பார்த்தபடி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வித்தியாசமாக இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகின்றனர். கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்தே இருக்கிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண்பார்வை இழந்த கோலத்தில் இருக்கும் படியாக இவரது சிலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோயில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ளது.

Views: - 50

0

0