நீதிக்காக ஆண்டவர் நிழலில் … மனம் உருகி பிரார்த்தனை

3 December 2019, 9:55 pm
pra-updatenews360
Quick Share

நீதியைத் தேடுகிறவனுமில்லை என்றீரே கர்த்தாவே! நீதியைத் தேட நீதியாய் வாழ என்னை அர்ப்பணிக்கிறேன். நீதியை பின்பற்றி உம்மை தேடுகிறவனாய் நான் வாழ எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே! உண்மையும் நீதியுமில்லாமல் உம்மை அறிக்கையிடுகிற மக்கள் நீதியாய் வாழ உதவிசெய்யும்.
என் நீதி எனக்கு முன்னாலே செல்லும் என்பதை உணர்ந்தவனாய் நான் நீதியாய் வாழ உதவி செய்யும் ஆண்டவரே!

நீதியாய் நடந்து செம்மையானவைகளை பேசி ஆதாயத்தை வெறுக்கிறவனை உயர்ந்த இடங்களில் வாசம் பண்ண செய்பவரே! நானும் நீதியாய் நடந்து உயர்வை அடைய உதவி செய்யும்.
ஆண்டவரே! நீதிமானுக்கு அவனுடைய நீதிக்கு தக்கதாய் செய்து ஆசீர்வதியும். நீதியை பின்பற்றுகிறவனை நேசிக்கிற கர்த்தாவே! நான் நீதியையே பின்பற்ற உதவி செய்யும்.

நான் நீதியாய் நியாயந் தீர்த்து சிறுமையும் எளிமையுமானவர்களுக்கு நியாயம் செய்ய கிருபை தாரும்.
‘நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்’ என்ற வசனத்தின்படி, நானும் உம்மருகே வருவதற்கு நீதியாய் வாழ உதவி செய்யும். நான் துன்மார்க்கனாய் இராதபடி நீதியை கற்றுக்கொண்டு வாழ உதவி செய்யும்.

பூமியின் குடிகளெல்லாம் நீதியை கற்றுக்கொண்டு வாழ உதவி செய்யும் கர்த்தாவே. முதலில் உம்முடைய ராஜ்யத்தையும் நீதியையுமே தேட எனக்கு கிருபை செய்யும். சகரியா எலிசபெத் தம்பதிகள் உமக்கு முன்பு நீதியுள்ளவர்களாய் வாழ்ந்ததுபோல நாங்களும் நீதியாய் வாழ உதவி செய்யும் ஆண்டவரே!

நான் பரிசுத்தத்தோடும் நீதியோடும் உமக்கு ஊழியம் செய்ய கிருபை செய்யும். நீதியும் தேவபக்தியுள்ளவனாயும் வாழ்ந்த சிமியோனைப் போல நானும் நீதியாயும் தேவபக்தியாயும் வாழ கிருபை செய்யுங்கள் ஆண்டவரே. தோற்றத்தின் படி நான் தீர்ப்புச் செய்யாமல் நீதியின்படி தீர்ப்பு செய்ய கிருபை தாரும்.