சபரிமலை மறுசீராய்வு மனு விசாரணை : இந்துக்களை தவிர்த்து தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் அந்த 2 மதத்தினர்..! எதற்காக தெரியுமா..?

5 February 2020, 5:41 pm
sabarimalai - updatenews360
Quick Share

2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய, அனைத்துப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற தீர்ப்பை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

அந்த ஐந்து நீதிபதிகளில் நான்கு நீதிபதிகள் “சபரிமலையில் ஆண்களுக்குண்டான அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு. எனவே, சபரிமலையில் பெண்களின் நுழைவை மதிக்கிறோம்” என்று தீர்ப்பளித்தபோது, அந்த அமர்வில் இருந்த பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டுமே, “பாரம்பரிய முறையை மாற்றுவது சரியல்ல” என்று அந்த நால்வரின் கருத்துக்கு மாறாகக் கருத்தைப் பதிந்திருந்தார்.

அந்தத் தீர்ப்பின் மீது திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் பல தனியார்கள் தீர்ப்பை மறுசீராய்வு செய்திட வழக்கு தொடுத்தனர்.

அந்த அத்தனை மறுசீராய்வு வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு பெஞ்ச்சிற்கு மாற்றினார் அன்றைய தலைமை நீதியரசர் ரஞ்சன் கோகய். நீதிமன்ற நடைமுறைப்படி, மறுசீராய்வு வழக்கு ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு மாற்றப்படுவது இதுவே முதல் முறை.

Sc new - updatenews360

அதே போல, மறுசீராய்வு என்றாலே வழங்கப்பட்ட தீர்ப்பின் நிறைகுறைகளை மட்டுமே ஆராய்ந்து முடிவெடுக்கப் படுவதாகும். ஆனால், இந்த மறுசீராய்வில் சபரிமலை வழக்கு மட்டுமல்ல; மசூதிகளில் பெண்களின் நுழைவுரிமை பற்றியும், பார்சி இனத்தவரின் வழிபாட்டுத் தலங்களில் வேற்றுமத ஆணைத் திருமணம் செய்து கொண்ட பார்சிப் பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ள நுழைவுரிமை பற்றியும் இணைத்து விசாரிக்கப்பட உள்ளது.

ஆக, இது மூன்று மதங்களுக்கான விவகாரம் பற்றி அலசப் போகிற அமர்வாக செயல்படப் போகிறது. இதன் விசாரணை வரும் 6ந் தேதி தொடங்குகிறது அந்த ஒன்பது நீதிபதிகள் 1) தலைமை நீதிபதி பாப்டே 2) பானுமதி 3) அசோக் பூஷண் 4) நாகேஸ்வர ராவ் 5) M.M.சந்தான கவுடா 6) அப்துல் நசீர் 7) சுபாஷ்ரெட்டி 8) P.R.கவால் 9) சூர்யகாந்த் ஆகியோர் வரும் வியாழன் முதல் தினசரி இவ்வழக்கைக் கையாளப் போகிறார்கள்.

அய்யப்பா…எதுதான் இங்கே மெய்யப்பா…! உண்மையை வெற்றி பெறச் செய்யப்பா!