தினம் ஒரு திருக்கோவில் : சமாதானம் அளிக்கும் சங்கிலி கருப்பு ராயர்

14 August 2020, 5:00 am
Quick Share

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பல கோயில்கள் உள்ளன. அவற்றின் மத்தியில் பெரும்பாலும் வெளியில் தெரியாத சக்தி வாய்ந்த திருக்கோயில்களும் உள்ளன. அந்த வகையில் கோவை மாவட்டம் சின்ன வேடம்பட்டி குறிஞ்சி நகரில் பிரசித்தி பெற்ற கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. இது 150 ஆண்டுகள் பழமையானது .

இந்த கோவிலில் கன்னிமூல கணபதி, கன்னிமார் உட்பட பரிகார தெய்வங்கள் உள்ளன. இக்கோவிலின் தல விருட்சம் அரச மரமாகும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் சங்கிலி கருப்பராயரை மனமுருகி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. தற்போது கோவில் அமைந்துள்ள இடம் முன்பு விவசாய பூமியாக இருந்த ஒரு காலம்.

மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்ச விவசாயிகள் செல்லும் போது, ராஜநாகம் ஒன்று அவர்களை தண்ணீர் பாய்ச்ச விடாமல் தடுத்துள்ளது. இதனால் பயந்துபோன விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சாமல் திரும்பிச் சென்று உள்ளனர். அன்று இரவு அவர்கள் கனவில் தோன்றிய சங்கிலி கருப்பு ராயர், அங்கு தனக்கு கோவில் கட்டி வழிபட்டால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் ;வேண்டிய வரங்கள் அளிப்பதாக கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் கருப்பராயருக்கு கோவில் கட்டி வழிபடத் துவங்கினர். சங்கிலி கருப்பராயர் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார். கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த அரச மரம் திடீரென பட்டுப்போய் கீழே விழுந்தது. இருப்பினும் அந்த மரம் சங்கிலி கருப்பராயரின் அருளால் மீண்டும் துளிர்த்து தற்போது மரமாக வளர்ந்துள்ளது.

தீராத நோயால் அவதிப்படுபவர்களும், எதிரி தொல்லை நீங்கவும் இறைவனை வேண்டுவார்கள். தொழில் வளம் பெருகவும் குழந்தை வரம் வேண்டியும் வருபவர்கள் கருப்புராயருக்கு எலுமிச்சை மாலை அணிவித்து ஆடு கோழிகளை பலியிட்டு வழிபட்டுச் செல்கிறார்கள். மேலும், கடவுளுக்கு அரிவாள், சுத்தியல். நாய் பொம்மை, சூலம்,கண் மலர் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

தினசரி காலை 6 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 9 மணி அளவில் வில் திருக்கோவில் நடை அடைக்கப்படுகிறது. அதன்பிறகு மாலை 6 மணியளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு க்கு நடை சாத்தப்படுகிறது.

ஆடி மாதம் மாவாசையன்று கோவில் திருவிழா நடைபெறும். அன்றைய தினம் மூலவருக்கு தேன், இளநீர் உட்பட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். இரவு 7 மணி அளவில் சங்கிலி கருப்பராயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஏழு நாட்களுக்குப் பிறகு ஆடுகள் பலியிடப்படும்.

இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்வார்கள். இந்த சங்கிலி கருப்பராயர் நமது பகையை விலக்கி அன்போடும் பழகும் குணத்தை ஏற்படுத்தித் தருவார். வாருங்கள். சங்கிலிக்கருப்பராயர் சன்னதியில் சமாதான கொடிகளை ஏற்றி வைத்து பகையற்ற வாழ்வை வாழ்வோம்.