திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் ஆலயம் : வடிவுடையம்மன் சக்தி பீடம்

15 December 2019, 10:30 am
tvt-updatenews360
Quick Share

சென்னை திருவொற்றியூர் என்கின்ற ஊரை உலகத்திற்கு பிரபலப்படுத்திய நாயகியாம் வடிவுடையம்மன் குடிகொண்டிருக்கும் பூமி இது. தியாகராஜ சுவாமி கோயில் என்று சொல்லப்பட்டாலும் ஆதிபுரீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்பட்டாலும் இங்கே, இந்தத் தலத்தின் நாயகியே முக்கியத்துவம் நிறைந்தவள். அம்பாளின் திருநாமம் – வடிவுடையம்மன். பேருக்கேற்றது போலவே, அழகு ததும்பக் காட்சி தருகிறாள். மிக முக்கிய சக்தி பீடங்களில், இந்தத் திருத்தலமும் ஒன்று.

அதேபோல் ஆதிபுரீஸ்வரர். இவரும் பேருக்கேற்றது போலானவர்தான். உலகின் முதல் சிவம் இவரே என்கிறது ஸ்தல புராணம். அதனால்தான் இந்தத் திருநாமம் அமைந்ததாகவும் விவரிக்கிறது.

புராண – புராதனப் பெருமை கொண்ட கோயில் இது. பிரளய காலத்தில் இந்த உலகை அழியாமல் காக்கும் பொருட்டு சிவனாரிடம் எல்லோரும் வேண்டிக் கலங்கினர். அப்போது தன் நெற்றிக் கண்ணிலிருந்து வெப்பத்தை உண்டாக்கினார். அந்த வெப்பத்தைக் கொண்டு சூழ்ந்திருந்த தண்ணீரை ஒற்றி ஒற்றி எடுத்தார் என்றும் அதனால் இந்த ஊருக்கு திரு ஒற்றியூர் என்றும் பின்னர் அதுவே திருவொற்றியூர் என மருவியதாகவும் சொல்கிறது ஸ்தல புராணம்.

தேவாரம் பாடிய மூவரும் இந்தத் தலத்துக்கு வந்து பதிகம் பாடிய பெருமை கொண்ட பூமி இது. அதேபோல் வள்ளலார், தன் பால்யத்தில் இங்கேயே கோயிலைச் சுற்றியே வந்துகொண்டு இருந்ததாகவும் ஆலயத்தின் மீது அப்படியொரு ஈர்ப்பு உண்டாம். வள்ளலாரின் பசியைப் போக்க, அவரின் அண்ணியின் வடிவில், வடிவுடையம்மனே வந்து உணவளித்ததாக சிலாகிக்கிறது ஸ்தல புராணம்.