வைகுண்ட ஏகாதசி சிறப்பு தகவல்கள்

26 December 2020, 5:00 am
Quick Share

விரதங்களில் சிறந்தது ஏகாதசி என்பார்கள். மாதந்தோறும் வரும் ஏகாதசி முக்கியமானதுதான் என்றாலும் மார்கழியில் வரும் ஏகாதசிதான் வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில், காலையில் எழுந்து நீராடிவிட்டு, திருமாலின் திருவுருவப் படத்துக்கு பூஜை செய்யலாம். விக்கிரக வழிபாடும் செய்யலாம். மஞ்சள், குங்குமம், வாழை உள்ளிட்ட பழ வகைகள் ஆகியவற்றை பூஜைக்குப் பயன்படுத்த வேண்டும். திருமாலுக்கு துளசி சார்த்துவது ரொம்பவே விசேஷம்.

அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று ஸேவிப்பது மிகுந்த பலனைத் தரும். பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கும் ஆலயங்களுக்குச் சென்று தரிசிப்பதும் வழிபடுவதும் ஜென்மாந்திரப் பலன்களைத் தந்தருளும். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யலாம். மெளன விரதம் மேற்கொள்வதும் உசத்தியானது. விஷ்ணு புராணம் படிக்கலாம். துளசி தீர்த்தம் பருகலாம். அன்றைய நாளில் உணவருந்தாமல் விரதம் மேற்கொள்வார்கள்.

வைகுண்ட ஏகாதசி நாளில் விரதமிருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது திருமாலின் பூரண அருளையும் மகாலக்ஷ்மியின் பேரருளையும் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.மறுநாள் துவாதசி. காலையில் நீராடிவிட்டு, ஆலயத்துக்குச் சென்று பெருமாளை ஸேவித்து விரதத்தை ஜநிறைவேற்றுவார்கள். தரிசனம் முடிந்து உணவருந்தி, விரதம் பூர்த்தி செய்தாலும் மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகுதான் தூங்குவது வழக்கம். வைகுண்ட ஏகாதசியன்று, விரதம் இருப்போம். இயலாதவர்கள், வைகுண்டவாசனை ஸ்மரிப்போம். வளமும் ஐஸ்வர்யமும் பெறுவோம்.