பெண்கள் குங்குமத்தை எந்தப் பகுதியில் இட்டுக் கொள்ள வேண்டும்?.

By: Udayaraman
15 October 2020, 5:00 am
Quick Share

பொதுவாக அனைத்து சுமங்கலிப் பெண்களும் தங்கள் நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு இடையில் குங்குமத்தை இட்டுக்கொள்ள வேண்டும். நல்ல மஞ்சளால் தகுந்த முறையில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை ஆக்ஞா சக்கிரம் என்னும் சக்கிரம் அமைந்துள்ள பகுதியில் இட்டுக் கொள்வதால் பெண்களில் எண்ண ஓட்டங்கள் சரியான முறயில் தூண்டப்படுகிறது. மற்றவர்களை வசீகரிக்கும் சக்தி கிடைக்கிறது.

குறிப்பாக கணவரின் நோய்கள் விலகி ஆரோக்கியத்தை ஏற்படுத்த அம்மனுக்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை இட்டுக் கொள்ளுதல் மிகச் சிறந்த சாதனமாகும். திருமணமான பெண்கள் மட்டும் நெற்றியிலும் மற்றும் தலை உச்சி வகிட்டிலும் என இரண்டு இடங்களிலும் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். அதாவது பெண்களின் தலை உச்சி வகிட்டிற்கு அங்குள்ள நேர் கோட்டிற்கு சீமந்தம் எனப்பெயர்.

அந்த நேர் கோடு ஆரம்பமாகும் தொடங்கும் இடத்தில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் பெண்களின் தலையெழுத்து கூட மாறிவிடும். ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் பிறக்கும் போது பிரம்மாவால் எழுதப்படும் தலையெழுத்து உச்சி வகிட்டுப் பகுதியில்தான் எழுதப்பட்டிருக்கிறது. அந்தத் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் சக்தி அம்பாளுக்குத்தான் உண்டு.

ஆகவேதான் தலையில் எழுதப்பட்டுள்ள துன்பங்களை துர்பாக்யத்தை போக்கிக் கொள்ள தலை உச்சி வகிட்டுப் பகுதியில் முறையாக பக்தியுடன் அம்பாளுக்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை சுமங்கலிப் பெண்கள் பிரசாதமாக இட்டுக் கொள்ள வேண்டும். இதனால் பிரம்ம தேவனால் எழுதப்பட்ட பற்பல கெட்ட பழக்கங்கள் யாவும் மாறும்; மறையும். அம்பாளின் பாத கமலங்களில் அர்ச்சனை செய்யப்பட்டு சீமந்தம் என்னும் உச்சி வகிட்டுப் பகுதியில் இட்டுக் கொள்ளும் சிந்தூரம் (குங்குமம்) தலையெழுத்தை மாற்றும் .

பொதுவாக பெண்களின் வாழ்க்கையை முக்கியமாக இரு பகுதிகளாக பிரிக்கலாம். ஒன்று திருமணத்திற்கு முன்பு பெற்றோர் ஆதரவில் வாழும் பகுதி, மற்றொன்று திருமணமான பின்னர் கணவன் பிள்ளைகள் போன்றோரின் ஆதரவுடன் வாழும் பகுதி, ஆண்களுக்கு உபநயனம் என்பது இரண்டாவது பிறவியாகக் கருதப்படுவதைப் போல் பெண்களுக்கும் திருமணம் என்பது இரண்டாவது பிறவியாகும். ஆகவேதான் பெண்களின் ஜாதகப்படி திருமணத்திற்கு முன்பு இருக்கும் அனைத்து பலன்களும் திருமணமான பின்னர் மாறுதலடையலாம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இவற்றில் திருமணமான பின்னர் வாழும் பகுதிதான், காலம்தான் அதிகமானது. அம்பாளிடம் வைக்கப்படும் தலையெழுத்தை மாற்றும் கோரிக்கை கூட வாழ்க்கையில் ஒரே ஒரு பகுதியில்தான் நிறைவேறும் என்பதால் அந்தப் பகுதி திருமணமான பின்னர் வாழும் பகுதியாக இருக்கட்டும் என்பதால் பெண்கள் திருமணமான பின்னர் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் உச்சி வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்ளுதல் என்பதை வலியுறுத்துகின்றனர். திருமணமான பெண்கள் தலைவகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்வதால் அவர்களது தலையெழுத்து நல்லதாக அமைந்து அவர்களுக்கு நல்ல கணவனுடனும், நல்ல குழந்தைகளுடனும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

Views: - 98

0

0