ஹாட்ரிக் ‘டக்’ அவுட் : ஸ்டூவர்ட் பிராட் பௌலிங்- மூன்று முறை டக் அவுட் ஆனார் டேவிட் வார்னர்

8 September 2019, 5:11 am
warner
Quick Share

பால்டேம்பரிங் விவகாரத்துக்குப் பிறகு மீண்டும் வந்து ஆஷஸ் தொடரில் பல சாதனைகளை ஸ்டீவ் ஸ்மித் உடைத்து வரும் நிலையில் அதே விவகாரத்தில் சிக்கி மீண்டும் வந்த ஆஸ்திரேலியா தொடக்க வீரர் டேவிட் வார்னர் தட்டுத் தடுமாறி வருகிறார்.

தற்போது, 2வது இன்னிங்ஸில் 196 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் இறங்கிய போதும் பிராட் பந்தை அவரால் சரியாக ஆட முடியவில்லை.

முதல் ஓவரின் 6வது பந்தில் டேவிட் வார்னர் எல்.பி.ஆகி டக் அவுட் ஆகி ஸ்கோரரைத் தொந்தரவு செய்யாமல் தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்டமிழந்து பெவிலியன் சென்றார். இது இத்தனைக்கும் நேர் பந்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் போட்டியில் ‘ஜோடி’ (Pair) என்று அழைக்கப்படும் இருமுறை டக் அவுட் ஆனதோடு கடந்த டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸ் டக் அவுட்டையும் சேர்த்து ஹாட்ரிக் டக் அவுட் ஆகியுள்ளார்.

அதுவும் 6வது முறையாக இந்தத் தொடரில் பிராட் பவுலிங்கிலேயே விக்கெட்டைக் பறி கொடுத்து அவுட் ஆனார் டேவிட் வார்னர். இந்தத் தொடரில் ஸ்டூவர்ட் பிராடின் 93 பந்துகளைச் சந்தித்த வார்னர் 80 டாட்பால்களுடன் 32 ரன்களை மட்டுமே எடுத்து 6 முறை அவுட் ஆகியுள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியா வார்னர், ஹாரிஸ், லபுஷேன் விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களுடன் தடுமாறி வருகிறது, ஆனால் 196 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் சேர்த்து ஆஸ்திரேலியா தற்போது 220 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இருப்பினும் இங்கிலாந்தின் பெரிய தலைவலியாகத் திகழும் ஸ்டீவ் ஸ்மித் களத்தில் இன்னும் வலுவாக நிற்கிறார்.