டி20 உலகக்கோப்பையில் களமிறங்க திட்டம்… டிவிலியர்ஸ்!

18 April 2021, 10:22 pm
Quick Share

இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணிக்காக களமிறங்க டிவிலியர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பாக நடக்கிறது. இதில் சென்னையில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் டிவிலியர்ஸ் அதிரடியாக அரைசதம் அடித்து, பெங்களூரு அணி எட்டமுடியாத அளவு ஸ்கோரை எட்ட கைகொடுத்தார். கடினமான ஷாட்களை கூட சர்வ சாதாரணமாக விளையாடி ரசிகர்களுக்கு உற்சாகமளித்தார் டிவிலியர்ஸ்

இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து யாரும் எதிர்பாராதவிதமாக ஓய்வை அறிவித்து தனது ரசிகர்களுக்கு டிவிலியர்ஸ் அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில் இவர் தற்போது இந்தியாவில் இந்தாண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓய்வில் இருந்து வெளிவந்து மீண்டும் தென் ஆப்ரிக்க அணிக்காக களமிறங்க ஆர்வமாக உள்ளதாக டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.

தவிர, இதுதொடர்பாக கடந்தாண்டு தென் ஆப்ரிக்க பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தன்னிடம் பேசியதாகவும் டிவிலியர்ஸ் தெரிவித்தார். கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் ஆட்டநாயகன் விருது வென்ற டிவிலியர்ஸ் பேசுகையில், “ஓய்வில் இருந்து வெளிவருவது குறித்து ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு பின் பேசவேண்டும். ஆனால் கடந்தாண்டு பவுச்சர் இதுகுறித்து என்னிடம் பேசினார்.

கடந்தாண்டு அவர் என்னிடம் வந்து ஆர்வமாக இருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு நான் நிச்சயமாக என்றேன். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் நான் எங்கிருக்கிறேன் என பார்த்து உடற்தகுதி குறித்து ஆலோசனை மேற்கொண்டு பின் முடிவு செய்ய வேண்டும். அதே நேரம் அணியின் நிலையும் எந்தளவு உள்ளது என்பதைப் பொறுத்தும் இது உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வீரர்களையும் பவுச்சர் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இத்தனை முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு எனக்கு அணியில் இடமில்லை என்றால் அதற்கு அதுதான் அர்த்தம். எனக்கு ஒரு இடம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி. அதனால் பவுச்சருடனான பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கிறேன். அதற்கேற்ப அடுத்த முடிவு குறித்து யோசிப்பேன்” என்றார்.

கடந்த 2019க்கு பின் டிவிலியர்ஸ் தற்போதுவரை 41 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் 15 அரைசதங்கள் விளாசியுள்ளார். தவிர கடந்தாண்டு (2020) ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டிவிலியர்ஸ் 454 ரன்கள் அடித்துள்ளார். இந்தாண்டு பங்கேற்ற 3 போட்டிக்கு பின் இவரின் சராசரி 62.50 ஆக உள்ளது.

Views: - 85

0

0