முழங்காலில் ஏற்பட்ட காயம்: முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து அக்சர் பட்டேல் விலகல்..!!

5 February 2021, 9:09 am
akshar pattel -updatenews360
Quick Share

சென்னை: முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் போட்டியில் விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அரங்கேறும் இந்த டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்டுடன் விலகிய நிலையில் ரஹானே தலைமையில் இந்திய அணி வெற்றியை தன்வசப்படுத்தியது. இந்நிலையில், இங்கிலாந்து அணியை வெற்றி கொள்ளும் நோக்கில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டார்.

இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பட்டேல் முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதுபற்றி பி.சி.சி.ஐ. வெளியிட்ட செய்தியில், பயிற்சி மேற்கொண்டபொழுது, பட்டேலுக்கு இடது முழங்காலில் வலி இருக்கிறது என கூறினார் என தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து பி.சி.சி.ஐ.யின் மருத்துவ குழு அக்சர் பட்டேலை தொடர்ந்து கவனிக்கும். அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் பற்றிய விரிவான அறிக்கைகள் பின்னர் வெளிவரும்.

Views: - 0

0

0