இங்கிலாந்து தொடரில் இது மட்டும் நடத்துட்டா… என் ஒருபக்கத்து மீசையை எடுத்துக்கிறேன்: அஸ்வின் ஓபன் சவால்!

25 January 2021, 10:21 pm
Quick Share

இங்கிலாந்து தொடரில் இந்திய வீரர் புஜாரா, சுழற்பந்துவீச்சாளர் ஒருவரின் பந்தை தூக்கி அடித்துவிட்டால் தான் ஒருபக்கத்து மீசையை எடுத்துக்கொள்வதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி மிரட்டிய இந்திய அணி, அடுத்ததாக இந்திய மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன் புஜாராவுக்கு சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையான சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோருடன் சேர்ந்து தனது யூடியூப் சேனலில் அஸ்வின் பேசிய போது இந்த சவாலை விடுத்துள்ளார். இந்த விவாதத்தின் போது அஸ்வின் ரத்தோரிடம், ஆஃப் ஸ்பின்னருக்கு எதிராக இந்திய வீரர் புஜாரா பந்தை தூக்கி அடிப்பதை பார்க்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ரத்தோர்,“அதற்கான வேலை நடக்கிறது. நான் இதை அவரிடம் பல முறை தெரிவித்துள்ளேன். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. இதை செய்யக்கூடாது என்பதற்காக மிகப்பெரிய காரணங்களை அவர் என்னிடம் தெரிவிக்கிறார்” என்றார்.

இதற்கு வேடிக்கையாக பதில் அளித்த அஸ்வின், “ஒருவேளை மொயின் அலி அல்லது வேறு சுழற்பந்துவீச்சாளருக்கு எதிராக புஜாரா இந்த இங்கிலாந்து தொடரின் போது தூக்கி அடித்துவிட்டால், நான் எனது ஒரு பக்கத்து மீசையை எடுத்துக்கொள்கிறேன். இது எனது வெளிப்படையான சவால்”என்றார். இதற்கு பதில் அளித்த ரத்தோர்,“இது மிகப்பெரிய சவால், இதை அவர் எடுத்துக்கொள்வார் என நம்புகிறேன்” என்றார்.

Views: - 6

0

0