இங்கிலாந்துக்கு எதிராக ஆண்டர்சனின் சாதனையைச் சமன் செய்த அஸ்வின்!

8 February 2021, 8:34 pm
India team - updatenews360
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் அரங்கில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரான ஆண்டர்சனின் சாதனையைச் சமன் செய்தார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் சென்னையில் தற்போது நடக்கிறது. இதன் நான்காவது நாள் ஆட்டத்தில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து இந்திய அணிக்கு 420 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் 28 ஆவது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். மேலும் ஆசிய மண்ணில் 26ஆவது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார். இந்நிலையில் இந்தியாவில் அஸ்வின் 22வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சென்னையில் அஸ்வின் மூன்றாவது முறையாக ஐந்து விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனையைச் சமன் செய்தார் அஸ்வின்.

இங்கிலாந்து மண்ணில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 22 முறை 5 விக்கெட் கைப்பற்றி கைப்பற்றியுள்ளார். ஒட்டுமொத்த வீரர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் இலங்கை மண்ணில் 45 முறை 5 விக்கெட் கைப்பற்றி கைப்பற்றியுள்ளார். இவரை தொடர்ந்தது மற்றொரு இலங்கை வீரரான ரங்கனா ஹெராத் 26 முறையும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளேவும் 25 முறை சொந்த மண்ணில் 5 விக்கெட் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை துவங்கிய போது முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றி மிரளவைத்தார் அஸ்வின். இதன் மூலம் கடந்த 100 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமை பெற்றார் அஸ்வின்.

கடைசியாகக் கடந்த 1907 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளரான பெர்ட் வாக்லர் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தியிருந்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் முதன் முதலாக முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர் இங்கிலாந்தின் பாபி பீல் ஆவார். இவர் கடந்த 1888இல் இந்த சாதனையை எட்டினார். இவர்களின் பட்டியலில் தற்போது அஸ்வினும் இணைந்துள்ளார்.

Views: - 0

0

0