ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்த இந்திய டாக்ஸி டிரைவர் மகன்!
29 January 2021, 4:51 pmஇந்திய வம்சாவளி வீரரான தன்வீர் சங்கா என்பவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற இரண்டாவது இந்திய வம்சாவளி வீரர் என்ற பெருமை பெற்றார் தன்வீர்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடர் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதற்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்த நாட்டு கிரிக்கெட் போர்டு சமீபத்தில் அறிவித்தது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 வயதான தன்வீர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து தன்வீர் கூறுகையில், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டில் இருந்து எனக்கு போன் வந்தபோது நான் நிலவில் மிதப்பதை போல உணர்ந்தேன். இந்த இளம் வயதில் சர்வதேச அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை” என்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளனர். ஆனால் அவர்கள் உள்ளூர் தொடர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அளவில் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
ஜேசன் சங்கா, அர்ஜுன் நாயர், பரம் உப ஆகியோர் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளனர். இதற்கிடையில் பஞ்சாப்பை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த குரிந்தர் சந்து சர்வதேச கிரிக்கெட் அணியில் வாய்ப்பு பெற்றார்.
தற்போது தன்வீர் சர்வதேச அணியில் இடம் பிடித்துள்ளார். சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பாக சர்வதேச அணியில் குரிந்தர் இடம் பிடித்திருந்தார். கடந்த 1997இல் ஜலந்தரில் இருந்து தன்வீரின் பெற்றோர் சிட்னிக்கு சென்றனர். தன்வீரின் தந்தை பஞ்சாபில் விவசாயி ஆக இருந்தவர். அவர் ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டுடென்ட் விசாவில் சென்றார். முதலில் அங்கு விவசாய பணிகளை மேற்கொண்டிருந்த ஜோகா சிங் அதன்பிறகு அங்கு டாக்ஸி ஓட்ட தொடங்கினார். தற்போதும் அவர் அங்கு டாக்சி ஓட்டி வருகிறார்.
தன்வீரின் தாய் அக்கவுண்டன்ட் ஆக பணியாற்றி வருகிறார். தன்வீர் தேர்வு குறித்து அவரின் தந்தை ஜோகா சிங் கூறுகையில், “தன்வீர் இயற்கையாகவே ஒரு சிறந்த விளையாட்டு வீரர். அவர் வாலிபால், ரக்பி, கபடி என சிறு வயது முதலே விளையாடி வருகிறார். தனது பத்தாவது வயதில் முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அதன்பிறகு பன்னிரண்டாவது வயதில் அவரை பெரியவர்களுக்கான கிரிக்கெட் விளையாட நான் அனுமதித்தேன்.
தன்வீர் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவர் ஐந்து முறை 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்து உள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 85.26 ஆகும். தோள்பட்டையில் ஏற்படும் காயத்தை தவிர்க்கவே வேகப்பந்து வீச்சுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சை தேர்வு செய்யும்படி அவருக்கு நான் அறிவுறுத்தினேன். இதன் விளைவாக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 6 போட்டிகளில் பங்கேற்று 15 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்” என்றார்.
0
0