முதுகு காயத்திற்கான அச்சுறுத்தலுக்கு இடையே ஆஸி., ஓபன் தொடருக்காக நடால் தீவிர பயிற்சி!

6 February 2021, 8:13 pm
Nadal - updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்பாக ஸ்பெயினின் நட்சத்திர டென்னிஸ் வீரர் நடால் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் தீவிர பயிற்சியில் சிரமம் இன்றி ஈடுபட்டார்.

ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. கடும் நெருக்கடிக்கு இடையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை வெற்றிகரமான நடத்த ஆஸ்திரேலிய டென்னிஸ் வாரியம் கடுமையாகப் போராடி வருகிறது. இந்நிலையில் ஸ்பெயினைச் சேர்ந்த நட்சத்திர வீரரான ரபெல் நடால், முதுகுப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் நடால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பங்கேற்க இருந்த ஏடிபி கோப்பை தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இதன் விளைவாக ஸ்பெயின் அணி அரையிறுதியுடன் வெளியேறியது. இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வரும் நடால், இன்று ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான பயிற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டார்.

இதுவரை 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், ஜான் கெயின் அரினாவில் மாலை நேரத்தில் எவ்வித சிரமும் இன்றி முழு வேகத்தில் சர்வீஸ் செய்தார்.

இந்நிலையில் நடால் உடல் நிலை குறித்து அவருடன் தொடர்பு கொண்ட பின் பேசிய ஆஸ்திரேலிய ஓபன் நிர்வாக அதிகாரி கிரேக் டிலே கூறுகையில்,“ஏடிபி கோப்பை தொடரில் இருந்து நடால் விலகக் காரணமே கூடுதல் பாதுகாப்பு கருதித் தான். தற்போது அவர் வெளியில் வந்து பயிற்சி மேற்கொள்வது அவர் குணமடைந்துவிட்டார் என்பதை குறிக்கிறது. அவர் தான் 21 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பை பாதுகாத்துக் கொள்கிறார்”என்றார்.

இதனால் நடால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முழுமையாகப் பங்கேற்பார் எனத் தெரிகிறது. நடால் கடந்த 2009 இல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தற்போது சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் மூட்டுப்பகுதியில் ஆப்ரேஷன் மேற்கொண்டதால், இந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் இந்தாண்டு நடால் கோப்பை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

Views: - 0

0

0