பிரிஸ்பேனில் சாதித்த இந்தியா : வாழ்த்து மழை மட்டுமல்ல… பரிசு மழையிலும் நனையும் வீரர்கள்..!!

19 January 2021, 1:53 pm
india team - updatenews360
Quick Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் ரூ.5 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பிரிஸ்பேனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 369 ரன்களும், இந்திய அணி 336 ரன்களும் எடுத்தன. இதைத் தொடர்ந்து, 35 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கி ஆஸ்திரேலியா அணி 294 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக, ஸ்மித் 55 ரன்களும், வார்னர் 48 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் சிராஜ் 5 விக்கெட்டுக்களும், தாக்கூர் 4 விக்கெட்டுக்களும் கைப்பற்றினர்.

இதனால், 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தை இன்று தொடங்கியது. இருபுறமும் வெற்றிக்கு வாய்ப்பு என்ற நிலையில், இந்திய அணி ஆரம்ப முதலே போட்டியை தன்பக்கமே வைத்துக் கொண்டது. தொடக்க வீரர் கில் 91 ரன்களும், புஜாரா 56 ரன்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்திய அணி வெற்றியின் அருகில் சென்ற நிலையில், களத்தில் இருந்த பண்ட் கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச் செல்வாரா..? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்தது. கடைசி 8 ஓவர்களுக்கு 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பண்ட்டும் கடைசி வரை களத்தில் இருந்து அதிரடி காட்டினார். இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், முதல்முறையாக பிரிஸ்பேனில் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும், பிரிஸ்பேனில் 31 ஆண்டுகளாக தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 தொடரை இழந்த நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. ஒரு தொடரில் இத்தனை சாதனைகளை படைத்ததுடன், இந்தியாவுக்கு பெருமை தேடிக் கொடுத்த இளம் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தத் தகவலை அதன் செயலர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.

அதோடு, பிரிஸ்பேனில் சாதித்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி, பிசிசிஐ தலைவர் கங்குலி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Views: - 10

0

0