பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸி., 369 ரன்கள் குவிப்பு : நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அபார பந்துவீச்சு
16 January 2021, 8:09 amஇந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 369 ரன்கள் குவித்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு வழக்கம் போல, தொடக்கம் சரியாக அமையவில்லை. வார்னர் (1), ஹாரிஸ் (5) ஆகியோர் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
பின்னர், லபுக்ஷனே மற்றும் ஸ்மித் மீண்டும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 90ஐ நெருங்கிய போது, ஸ்மித்தின் (36) விக்கெட்டை, தனது அறிமுக டெஸ்டில் கைப்பற்றி அசத்தினார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர். ஆனால், மறுபுறம் லபுக்ஷனே நிதானமாக ஆடி சதம் அடித்தார். இப்படி மரண ஃபார்மில் உள்ள வீரரை, 108 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார் தமிழக வீரர் நடராஜன். முன்னதாக, வேட் (45) இவருடைய முதல் சர்வதேச டெஸ்ட் விக்கெட்டாகும்.
இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. கேப்டன் பெயின் (38), க்ரீன் (28) ரன்னுடனும் 2வது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கினர். இருவரும் நிதானமாக ஆடினாலும், டிம் பெயின் (50 அரை சதத்துடனும், க்ரின் 47 ரன்னுடனும் விக்கெட்டை இழந்தனர். இதைத் தொடர்ந்து, வந்த வீரர்களும் விரைவில் விக்கெட்டுக்களை இழந்தனர்.
இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சைனி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
0
0