கடந்த 1932 இல் இதான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனையாகவே இருந்தது: சிக்கலைச் சுட்டிக்காட்டிய கவாஸ்கர்!

15 January 2021, 7:56 pm
Quick Share

கடந்த 1932 இல் இந்திய கிரிக்கெட் அணி சந்தித்த மோசமான சிக்கல் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள போதும், ஆஸ்திரேலிய அணி 274 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா சார்பில் மார்னஸ் லபுஷேன் டெஸ்ட் அரங்கில் தனது ஐந்தாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இந்நிலையில் இந்திய அணியில் பவுலர்கள் அனுபவம் இல்லாத போதும் முதல் நாள் ஆட்டத்தில் தங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செயல்பட்டதாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ஆனால் அதே நேரம் கடந்த 1932 இல் இந்திய அணி தனது முதல் போட்டியில் பங்கேற்ற போது தற்போதுள்ள மோசமான சிக்கலை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், “இந்திய அணி வீரர்கள் முதல் 5 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி விடுகின்றனர். ஆனால் சிக்கலே கடைசி 5 விக்கெட்டுகளை வீழ்த்த தவறுவதில் தான் உள்ளது. தேநீர் இடைவேளையின்போது வரை இந்திய அணி போட்டியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் அதன்பிறகு விக்கெட் வீழ்த்த தவறியதால், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அசைக்க முடியாத பாட்னர்ஷிப் மூலம் போட்டியை அவர்கள் வசம் இழுத்து வருகின்றனர்.

இந்திய அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களான இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் இல்லாத நிலையில் கூட இந்த அனுபவமற்ற பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர் . நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுக நிலையிலேயே உள்ளனர். ஆனால் அவர்கள் முதல் 5 விக்கெட்டுகளை முதல் நாளிலேயே கைப்பற்றிய அசத்தியுள்ளனர்.

கடந்த 1932இல் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்ற போது இங்கிலாந்தின் டாப் 5 விக்கெட்டுகளை குறைந்த ரன்களுக்குள் கைப்பற்றினர். ஆனால் கடைசி ஐந்து வீரர்கள் சேர்ந்து ஏகப்பட்ட ரன்களை குவித்து விட்டனர். இதுவே இந்திய கிரிக்கெட்டின் கதையாக தற்போது மாறியுள்ளது. அந்தப் போட்டியைப் போல இந்த போட்டியிலும் நடந்து விடாமல் இருக்க, இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியை 350 ரன்களுக்குள் சுருட்டி விட வேண்டும். இல்லையென்றால் சிக்கல் தான்”என்றார்.

Views: - 9

0

0