18 வயதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம்: பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு அபாரம்!!

Author: Aarthi
12 September 2021, 10:55 am
Quick Share

வாஷிங்டன்: தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய வீராங்கனை பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு அமெரிக்க ஓபன் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில், பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு கோப்பையை வசப்படுத்தினார். உலக தரவரிசையில் 150 வது இடத்தில் இருக்கும் 18 வயது ஆன ரடுகானு, கனடாவை சேர்ந்த உலக தரவரிசையில் 73வது இடத்தில் இருக்கும் 19 வயது வீராங்கனை லேலா பெர்னான்டசை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரிட்டன் வீராங்கனை ரடுகானு வெற்றி பெற்றார். இதன் மூலம் 44 ஆண்டுகளுக்கு பின் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.


அவருக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரடுகானுவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. முன்னதாக 1977ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த விர்ஜினியா வேட் என்ற வீராங்கனை விம்பிள்டனில் மகளிர் ஒற்றையரில் வாகை சூடியிருந்தார். அவருக்கு பிறகு தற்போது எம்மா ரடுகானு வாகை சூடியிருக்கிறார்.

அமெரிக்க ஓபன் கோப்பையை வென்ற ரடுகானுவை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் பாராட்டியுள்ளார். இவ்வளவு சிறிய வயதில் குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளீர்கள், இது உங்களின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த வெற்றி என ராணி எலிசபெத் பாராட்டியிருக்கிறார்.

தரவரிசையில் மிகவும் பின் தங்கிய வீராங்கனைகள் முதல் முறையாக இறுதிப் போட்டியில் மோதிய போட்டி இதுவாகத்தான் இருந்தது. மேலும் தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய ஒரு வீராங்கனை அமெரிக்க ஓபன் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Views: - 449

0

0