அன்று யுவராஜ்… இன்று பும்ரா… Broad-ஐ வைத்து மீண்டும் ஒரு உலக சாதனை… இங்., டெஸ்ட் போட்டியில் சுவராஸ்யம்..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
2 July 2022, 4:45 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 2021ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியின் கடைசி ஆட்டம் கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி பெர்மிங்காமில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 100 ரன்களை எட்டுவதற்குள் முன்னணி 5 வீரர்களின் விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனால், இந்திய அணி 200 ரன்களை தொடுமா..? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால், 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் பண்ட்டுடன் ஜடேஜா இணைந்து சிறப்பாக ஆடினார். நேற்றைய ஆட்டத்தில் சதம் விளாசிய பண்ட் 146 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்திருந்தது.

இதைத் தொடர்ந்து, 2வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஜடேஜா சதம் விளாசி ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கடைசி விக்கெட்டுக்கு பேட்டிங் வந்த கேப்டன் பும்ரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வீசிய 84வது ஓவரில் 35 ரன்கள் விளாசி, உலக சாதனை படைத்தார் பும்ரா. அதாவது, இந்த சாதனை பிராடுக்கு மோசமான பந்து வீச்சு என்ற உலக சாதனை படைத்திருந்தாலும், அதற்கு காரணமாக பும்ராவும் இருந்துள்ளார்.

முதல் பந்தில் பந்தில் பவுண்டரி, 2வது பந்தில் வைடு+4, மீண்டும் வீசப்பட்ட பந்தில் நோ பால்+ சிக்ஸ், மீண்டும் வீசப்பட்ட 2வது பந்தில் பவுண்டரி, 3வது மற்றும் 4வது பந்தில் பவுண்டரி, 5வது பந்தில் சிக்ஸ் மற்றும் 6வது பந்தில் ஒரு ரன் என மொத்தம் 35 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை விளாசிய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.

அதற்கு முன்னதாக, 2003ல் தென்னாப்ரிக்க வீரர் ஆர்.பீட்டர்சன் வீசிய ஒரு ஓவரில் லாராவும், 2013ல் ஆண்டர்சன் பந்துவீச்சில் பெய்லியும், 2020ல் ரூட் வீசிய ஓவரில் கே. மகாராஜூம் தலா 28 ரன்களை அடித்து சாதனை படைத்திருந்தனர். தற்போது, அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

ஏற்கனவே, உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பிராடு வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர்களை யுவராஜ்சிங் விளாசி உலக சாதனை படைத்தார். இந்த நிலையில், அதே பந்துவீச்சாளரை வைத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா, அதுவும் கேப்டனான முதல் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்.

Views: - 869

0

0