ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் : சென்னை அணியின் ‘கிங்’ தோனியின் சாதனைகள் ஒரு பார்வை..!

17 September 2020, 2:12 pm
ms-dhoni-csk - updatenews360
Quick Share

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோன அச்சுறுத்தலால் இந்த மாதம் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் இந்தத் தொடர் தொடங்க உள்ளதால், அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிலும், சென்னை அணியின் மீது இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காரணம், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்று விட்டதால், முழுக்க முழுக்க ஐபிஎல்லில் மட்டுமே அவர் கவனம் செலுத்த உள்ளார். இதனால், அவரது ஆட்டத்திறனில் மாற்றம் இருக்குமோ..? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் தோனி இதுவரையில் என்னென்ன சாதனைகளை கையில் வைத்துள்ளார் என பட்டியலிடப்பட்டுள்ளது.

ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் தோனி 3வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் கெயில் (326), டிவில்லியர்ஸ் (212), தோனி (209) ஆகியோர் உள்ளனர். இந்திய வீரர்களில் தோனி முதலிடத்தில் உள்ளார்.

அதேபோல, அதிக போட்டிகளில் கேப்டனாக விளையாடியர் என்ற பெருமையை தோனி மட்டுமே தக்க வைத்துள்ளார். 10 சீசனில் சென்னைக்கும், ஒரு சீசனில் புனே அணிக்கும் கேப்டனாக இருந்துள்ளார். மொத்தம் 174 தோனி கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில், 104 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஐ.பி.எல் தொடரில் 100 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஒரே கேப்டன் தோனி தான்.

ஐ.பி.எல் தொடரில் விக்கெட் கீப்பராக தோனி 132 பேரை ஆட்டமிழக்கச் செய்ய காரணமாக இருந்துள்ளார். இதில் 38 ஸ்டெம்பிங் என்பது குறிப்பிடதக்கது.