சிறப்பான தரமான சம்பவத்துக்கு ரெஸ்ட்டே இல்லாம ரெடியாகும் சின்ன ‘தல’ரெய்னா!

Author: Udhayakumar Raman
28 March 2021, 6:49 pm
Quick Share

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாதிக்கச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் பகுதி ஆட்டத்தை மும்பையில் பங்கேற்கிறது. இதற்காகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் மும்பை சென்றடைந்துள்ளனர். அங்கு அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் தங்களின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த பயிற்சி முகாமில் அந்த அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்படும். அதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டபின் அவர்கள் ஹோட்டலை விட்டு வெளியேறி பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதிக்கத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஹோட்டல் அறைக்குள்ளேயே ரெய்னா பயிற்சி செய்யும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் போட்டியில் ஏப்ரல் 10ஆம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்பிறகு பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்கிறது.

மும்பையில் போட்டிகளை முடித்தபின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியில் 4 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதைத் தொடர்ந்து பெங்களூர் செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்குக் கொல்கத்தா, மும்பை அணிகளை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து கடைசி இரண்டு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவில் விளையாடவுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. ஆனால் கடந்த முறை அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இதன் மூலம் முதல் முறையாக அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. கடந்த தொடரில் ரெய்னா பங்கேற்கவில்லை. இந்த முறை ரெய்னாவின் வருகை சென்னை அணிக்கு மிகப்பெரிய பலம் சேர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Views: - 76

0

0