சென்னை டெஸ்டில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் : இந்திய அணியின் வியூகம் இதுதானா?

3 February 2021, 7:24 pm
India test team - updatenews360
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி நிச்சயமாக மூன்று சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு களமிறங்கும் எனத் தெரிகிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 5 ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் உடன் குல்தீப் யாதவ் களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட இந்திய தேர்வுக்குழுவினருக்கு தற்போது மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

இந்திய ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சை விட சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் கைகொடுக்கும் என்பதால் சென்னை டெஸ்டில் மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் எனத் தெரிகிறது. இதில் ரவிந்திர ஜடேஜா இல்லாத நிலையில் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மூன்றாவது சுழற்பந்து வீச்சாளருக்கான இடத்திற்கு ஆல் ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஆஸ்திரேலிய தொடரில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கிலும் கைகொடுத்ததால், அக்‌ஷர் படேலைவிட அதிக முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “நிர்வாகம் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த விரும்பினால் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேநேரம் கடந்த வாரம் இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் கூடுதல் பலம் சேர்த்தார். அந்த வகையில் பார்க்கும் போது அக்‌ஷர் படேலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்றார்.

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் அணியில் நிலவும் மற்றொரு சிக்கல் வேகப்பந்து வீச்சாளருக்கான இடம் தான். மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பிடித்தால், எஞ்சியுள்ள இரண்டு வேகப்பந்துவீச்சாளர் இடத்தில் ஜஸ்பிரீத் பும்ரா உறுதியாக இடம் பெறுவார். மற்றொரு இடத்திற்கு அனுபவ இஷாந்த் சர்மாவிற்கு இளம் முகாமது சிராஜ் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள இஷாந்த் சர்மாவின் அனுபவம் இந்திய அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் எனத் தேர்வுக்குழுவினர் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

Views: - 0

0

0