கேப்டன் தோனி-ரெய்னா இடையே மோதல் : ஐபிஎல் டி20 தொடரில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணமா..?

31 August 2020, 8:59 am
Quick Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி-ரெய்னா இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.

கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்.,19-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 5 நாள் பயிற்சியை எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து, தோனி தலைமையிலான சென்னை அணியினர் கடந்த 21-ஆம் தேதி தனி விமானத்தில் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். அங்கு வீரர்கள் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு 6 நாட்கள் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 29 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் “தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார். இதுபோன்ற தருணத்தில் சுரேஷ் ரெய்னா குடும்பத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துணை நிற்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர் வெளியேறியதற்கு என்ன காரணம் என்ற கோணத்தில் பல்வேறு வதந்திகளும், செய்திகளும் வெளியாகின. ஆனால், ரெய்னா தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. இந்த சூழலில், பதான்கோட்டில் அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்களால் தாக்கப்பட்டதில் அவரது மாமா காலமானார் மற்றும் அவரது குடும்பத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். இதனால் அவர் தொடலில் இருந்து வெளியேறி வீடு திரும்பியதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது, வேறு ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி மற்றும் ரெய்னா இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கேப்டன் தோனிக்கு தந்ததைப் போல் பால்கனியுடன் கூடிய அறை தனக்கு தரப்படாததால் ரெய்னா அதிருப்தி அடைந்ததாகவும், தோனி அறிவுரைப்படி சென்னையில் நடந்த முகாம் பற்றியும் அணி நிர்வாகத்திடம் ரெய்னா கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது ரெய்னா வாய் திறந்தால் மட்டுமே தெரிய வரும் என்ற எதிர்பார்பே மிஞ்சியுள்ளது.

Views: - 0

0

0