ஆஸி ஓபன் தொடரில் பங்கேற்கும் அமெரிக்க வீராங்கனைக்கு கொரோனா: முர்ரேவும் சந்தேகம்!

14 January 2021, 10:16 pm
Quick Share

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவிருந்த அமெரிக்காவின் மேடிசன் கீஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் அடுத்த மாதம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கக் கிளம்புவதற்கு முன்பாக நடத்தப்பட்ட சோதனையில் இவருக்கு கொரோனா வைரஸ் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் தற்போது தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கீஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஹாய். ஆஸ்திரேலியா கிளம்புவதற்கு முன்பாக எதிர்பாராதவிதமாக எனக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காகக் கடினமாகப் பாடுபட்டும் இன்னும் சில வீரர்கள் டென்னிஸ் விளையாட முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த தொடரை நடத்த டென்னிஸ் ஆஸ்திரேலியா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. தற்போது நான் எனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்.

தொடர்ந்து உடல்நலனுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளேன். அடுத்த மாதம் தொடர் துவங்குவதற்குள் குணமடைவேன் என எதிர்பார்க்கிறேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி. பாதுகாப்பாகவும் ஆரோக்கியமுடனும் இருக்கவும்” என அதில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக முன்னாள் நம்பர்-1 வீரரான பிரிட்டனின் ஆண்டி முர்ரேவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் இவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. காயம் காரணமாக நீண்ட நாட்களான டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியிருந்த முர்ரே தரவரிசையில் 123ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இருந்தாலும் இவருக்கு இந்த தொடரில் பங்கேற்க சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.

Views: - 9

0

0