ரசல் ருத்ரதாண்டவம்… கம்மின்ஸ் போராட்டம் வேஸ்ட்: த்ரில் வெற்றி பெற்ற சென்னை!

21 April 2021, 11:25 pm
Quick Share

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. மார்கன் தலைமையிலான சென்னை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தத போட்டிகளில் எழுச்சி பெற்று வெற்றிகளை வசமாக்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு டுபிளசி (95*), ருதுராஜ் (64) ஆகியோர் கைகொடுக்க 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது.

சொதப்பல் துவக்கம்
கடின இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பத்திலேயே தீபக் சஹார் வேகத்தில் ஆட்டம் கண்டது. போட்டியின் முதல் ஓவரிலேயே சுப்மான் கில்லை (0) வெளியேற்றிய சஹார். அவரின் அடுத்த ஓவரிலேயே நிதிஷ் ரானாவை (9) அவுட்டாக்கினார். தொடர்ந்து போட்டியின் ஐந்தாவது ஓவரை வீச வந்த சஹார் இந்த முறை கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கனை (7) பெவிலியனுக்கு திருப்பினார்.

ரசல் அதிரடி
தொடர்ந்து திருப்பதி (8) நிகிடி வேகத்தில் அவுட்டாக கொல்கத்தா அணி முதல் 6 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டை பறிகொடுத்து தட்டுத்தடுமாறி சிக்கி சின்னாபின்னமானது. பின் களமிறங்கிய ஆண்ரே ரசல் வந்த வேகத்தில் வெறியாட்டத்தை துவங்கினார். சார்துல் தாகூர் வீசிய போட்டியின் 10வது ஓவரில் 3 சிக்சர்கள், 1 பவுண்டரின் என மொத்தமாக 24 ரன்கள் அடித்தார் ரசல்.

ரவிந்திர ஜடேஜாவின் அடுத்த ஓவரிலும் இமாலய சிக்சர் பறக்கவிட்ட ரசல் 21 பந்தில் அரைசதம் கடந்து மிரட்டினார். இதன் மூலம் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் சாம் கரண் வீசிய அடுத்த ஓவரில் பந்து வைடாக செல்வதாக நினைத்து லெக் ஸ்டெம்ப்பை பறிகொடுத்தார் ரசல். இவர் இந்த போட்டியில் 22 பந்தில் 3 பவுண்டரிகள், 6 இமாலய சிக்சர்கள் என 54 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.

கம்மின்ஸ் அதிரடி
தொடர்ந்து களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டார். அதுவரை ரசலுக்கு கம்பெனி கொடுத்துக்கொண்டிருந்த கார்த்திக் திடீரென அதிரடிக்கு மாறி அதே ஓவரில் 1 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார். ஆனால் கார்த்திக்கும் (40) நிகிடியின் ஸ்லோ யார்க்கரில் வெளியேற கொல்கத்தா அணி ஆட்டம் கண்டது.

இருந்தாலும் கொஞ்சமும் அசராத பாட் கம்மின்ஸ், சாம் கரன் வீசிய அடுத்த ஓவரிலேயே 4 இமாலய சிக்சர்கள், 1 பவுண்டரி என 30 ரன்கள் குவித்தார். இதையடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற 4 ஓவரில் 45 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் நிகிடி, கொல்கத்தா வீரர் நாகர்கோடியை (0) அவுட்டாக்கினார். கடைசி ஓவரின் முதல் பந்திலேயே பிரசித் கிருஷ்ணா (0) ரன் அவுட்டாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவரில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கம்மின்ஸ் 66* ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

Views: - 727

0

0