பெங்களூர் அணியை பந்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Author: Udhayakumar Raman
25 September 2021, 12:05 am
Quick Share

பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு தேவ்தட் படிக்கல் 70 ரன்களும், விராட் கோலி 53 ரன்களும் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 156 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 38 ரன்களும், டூபிளசிஸ் 31 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.மிடில் ஆர்டரில் களமிறங்கிய மொய்ன் அலி 23 ரன்களும், அம்பத்தி ராயூடு 32 ரன்களும், இக்கட்டான கடைசி நேரத்தில் பொறுப்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னா 17 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியும் பெற்றுள்ளது.பெங்களூர் அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்சல் பட்டேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் சாஹல் மற்றும் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Views: - 380

0

0