வெளுத்து வாங்கிய வார்னர்… சிஎஸ்கேவுக்கு எதிராக அடுக்கடுக்காக சாதனை படைத்து மிரட்டல்!

28 April 2021, 9:28 pm
Quick Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் அரைசதம் விளாசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பல்வேறு சாதனைகளை படைத்தார்.

இந்தியாவில் 14 வது ஐபிஎல் கிரிக்கெட் தற்போது நடக்கிறது. டெல்லியில் நடக்கும் இன்றைய 23வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் (57) மற்றும் மணீஷ் பாண்டே (61) ஆகியோர் அரைசதம் கடந்து மிரட்டினர். கடைசி நேரத்தில் கேன் வில்லியம்சன் அதிரடியாக 10 பந்தில் 26 ரன்கள் அடித்து கைகொடுக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 171 ரன்கள் அடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் லுங்கி நிகிடி அதிகபட்சமாக 2 விக்கெட் சாய்த்தார்.

50
இந்த போட்டியில் அரைசதம் கடந்த சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் தனது 50வது அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் 50 அரைசதம் அடித்த முதல் வீரரானார் டேவிட் வார்னர். இவரைத் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டெல்லி கேப்டன் ஷிகர் தவான் (43) உள்ளார்.

4000
டேவிட் வார்னர் 35 ரன்கள் அடித்த போது ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான 4000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

200
இந்த போட்டியில் முதல் சிக்சர் அடித்த டேவிட் வார்னர் ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் தனது 200-வது சிக்சரை பதிவு செய்தார். இதன்மூலம் ஐபிஎல் அரங்கில் இந்த மைல்கல்லை எட்டிய 8வது வீரர் என்ற பெருமை பெற்றார். மேலும் இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது வெளிநாட்டு வீரர் ஆனார் வார்னர். வார்னரைத் தவிர்த்து ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் 200 சிக்சர்களை கடந்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல், ஏபி டிவிலியர்ஸ் மற்றும் போலார்டு உள்ளனர்.

10000
மேலும் இந்த போட்டியில் வார்னர் 39 ரன்கள் அடித்த பொழுது டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து அசத்தினார். இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது வீரரானார் வார்னர். தவிர, இந்த சாதனையைப் படைத்த முதல் ஆஸ்திரேலிய வீரரானார் வார்னர்.

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:

கிறிஸ் கெயில் – 13839 ரன்கள்
கெய்ரன் போலார்டு – 10694 ரன்கள்
சோயிப் மாலிக் – 10488 ரன்கள்
டேவிட் வார்னர் – 10017 ரன்கள்
பிரண்டன் மெக்கலம் – 9922 ரன்கள்

500 + 200
இதற்கிடையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 500 பவுண்டரிகள் மற்றும் 200 சிக்சர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார் டேவிட் வார்னர். முன்னதாக பெங்களூரு கேப்டன் விராட் கோலி இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரரானார்.

Views: - 256

0

0