மாயங்க மல்லுக்கட்டு வீண்: தாறுமாறு அடி அடித்த தவான்… டெல்லி அணி அசத்தல் வெற்றி!

2 May 2021, 10:58 pm
Quick Share

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லி அணியை எதிர்கொண்டது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ராகுல் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மாயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இதில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

மாயங்க் மிரட்டல்
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ராகுல் இல்லாத நிலையில் கேப்டன் பொறுப்பை ஏற்ற, மாயங்க் அகர்வால் 58 பந்தில் 8 பவுண்டரி 4 சிக்சர் என மொத்தமாக 99 ரன்கள் அடித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். மேலும் ஐபிஎல் அரங்கில் தனது 9வது அரைசதத்தை பதிவு செய்தார் மாயங்க். இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் அடித்தது.

அசத்தல் துவக்கம்
எட்டக்கூடிய இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்தது. எப்போதும் போல இந்த முறையும் பவர் ப்ளே எனப்படும் முதல் 6 ஓவரில் பஞ்சாப் பவுலர்களின் பந்து வீச்சை பஞ்சாக்கிய இருவரும் 63 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் பிரித்வி ஷா 39 ரன்கள் அடித்த போது ஹர்பிரீத் பரார் சுழலில் போல்டானார்.

தவான் அரைசதம்
தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 22 பந்தில் 24 ரன்கள் அடித்து அவுட்டாக, எதிர்முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் அரைசதம் கடந்தார். பின் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், வந்த அதே வேகத்தில் முகமது ஷமியின் வேகத்தில் ஒரு மெகா சிக்சர் பறக்கவிட்டார். இந்நிலையில் டெல்லி அணி வெற்றி பெற 5 ஓவரில் 28 ரன்கள் தேவை என்ற நிலையை எட்ட, தவான், பண்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் ஜார்டன் வேகத்தில் ரிஷப் பண்ட் (14) அவுட்டானார். தொடர்ந்து வந்த ஹேட்மயர் இரண்டு சிக்சர் அடித்து கைகொடுக்க, டெல்லி கேபிடல்ஸ் அணி, 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் அடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Views: - 125

0

0

Leave a Reply