கேட்சுகளை கோட்டை விட்டு மேட்சை இழந்த சென்னை அணி : தவான் அசத்தல் சதம்..! அதிர்ச்சி கொடுத்த அக்சரின் ஹாட்ரிக் சிக்ஸ்..!

17 October 2020, 11:32 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

சார்ஜாவில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க வீரர்களாக சாம் கரன் மற்றும் டூபிளசிஸ் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் கரன், ஆட்டத்தின் 3வது பந்திலே ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதைத்தொடர்ந்து, ஜோடி சேர்ந்த டூபிளசிஸ் – வாட்சன் இணை, மேற்கொண்டு விக்கெட்டுக்கள் விளாமல், நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். வாட்சன் 36 ரன்னிலும், அரைசதம் அடித்த டூபிளசிஸ் 58 ரன்னிலும் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, தோனியும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

சிறிய மைதானமான சார்ஜாவில் சென்னை அணி இன்னும் வான வேடிக்கை காட்டவில்லையே என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அப்போது, ஜடேஜா, ராயுடு ஜோடி பந்தை சிக்சர்களுக்கு பறக்கவிட்டு அமர்க்களப்படுத்தினர். ராயுடு 25 பந்துகளில் 45 ரன்களும், ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்களும் சேர்க்க, சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு, விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், தவான் ரன்களை அதிரடியாக குவித்தார். அவர் கொடுத்த 4 கேட்சுகளை சென்னை ஆனியின் வீரர்கள் தவறவிட்டனர். இதனால், தவான் சதம் விளாசினார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது, ஜடேஜா வீசிய அந்த ஓவரில், அக்ஷர் படேல் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து, சென்னையின் கையில் இருந்த வெற்றியை பறித்தார்.

இதன்மூலம், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 6வது தோல்வியை சந்தித்த சென்னை அணி தொடர்ந்து 6வது இடத்திலேயே உள்ளது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் பிளே ஆப் வாய்ப்பை பெற முடியும்.

Views: - 26

0

0