‘கேப்டன்னா.. அது அவரு மட்டும்தான்’…! தோனியை புகழ்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்..!
11 August 2020, 4:10 pm2011ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்ற போது, எதிரணியான இலங்கையின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முத்தையா முரளிதரன். இவர் அண்மையில் டெலிவிசன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவர் கூறியதாவது :- இளம் வயதில் கேப்டன் பதவியை ஏற்ற தோனி, 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்தார். தோனியின் கேப்டன்ஷிப் மற்றும் கோட்பாடுகள் அனைத்தும் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். அதில், ஒன்றை குறிப்பிட வேண்டுமென்றால், பந்து வீசும் பவுலரிடமே பீல்டிங்கை அமைத்துக் கொள்ளும்படி விட்டு விடுவார். அது சரிவரவில்லையெனில், பவுலரின் அனுமதி பெற்று, பிறகு அவர் பீல்டிங் அமைப்பை மாற்றுவார்.
நல்ல பந்தை பேட்ஸ்மேன் சிக்சராக அடித்தால், தோனி பவுலரை கைதட்டி பாராட்டுவார். இதுமாதிரியான அணுகுமுறை எல்லோரிடமும் வந்து விடாது. எந்தவொரு தவறையும் சம்பந்தப்பட்ட வீரரை தனியே அழைத்து கூறுவார். அனைவரின் முன் கூற மாட்டார். இதுதான் அவரை வெற்றிகரமான கேப்டாக மாற்ற உறுதுணையாக இருக்கிறது. சீனியர் வீரர்களின் கருத்துக்களை கேட்டு ஆலோசித்து முடிவெடுக்கும் அவர், அமைதியாக சிந்திக்கும் திறனையும் கொண்டுள்ளார். அணி வெற்றி பெற எந்த மாதிரியான வீரர்கள் தேவை என்பதில் நன்கு கவனமாக இருப்பார், எனக் கூறியுள்ளார்.