இரட்டை சதம் விளாசிய பிரித்வி ஷா : ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்து அசத்தல்!

25 February 2021, 1:21 pm
Prithvi Shah - Updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா மும்பை அணிக்காகப் பங்கேற்ற விஜய் ஹசாரே டிராபி தொடரில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் மற்றும் மும்பை அணியை சேர்ந்த பிரித்வி ஷா, இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் புதுச்சேரி அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 200 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரித்வி ஷாவும் இணைந்துள்ளார்.

புதுச்சேரி அணிக்கு எதிராக 45-வது ஓவரில் சிங்கிள் எடுத்ததன் மூலம் இவர் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தனது 6வது சதத்தை அடித்து அசத்தியுள்ளார் பிரித்வி ஷா. இதற்கு முன்பாக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் 150 ரன்கள் அடித்திருந்ததே இவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த இரட்டை சதம் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய 8வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் பிரித்வி ஷா.

இந்த பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமை பெற்றவர். இவரைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், யாஷஸ்வி ஜெய்ஸ்வல், ஷிகர் தவன் மற்றும் கரண் கவுசல் ஆகியோர் இரட்டை சதம் விளாசியுள்ளார். மேலும் மும்பை அணிக்காக இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார் பிரித்வி ஷா.

கடந்த 2019- 20 ஆம் ஆண்டில் நடந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வல் ஜார்கண்ட் அணிக்கு எதிராக 203 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முறையாக அணியை வழிநடத்திய பிரிஷ்வி ஷா தனது அரைசத்தை வெறும் 21 பந்தில் எட்டினார். மேலும் சதத்தை 20 ஓவருக்கு முன்பாகவே எட்டினார் பிரித்வி ஷா. அதே வேகத்தில் 150 ரன்களை எட்டிய ஷா, இந்த போட்டியில் 200 அடித்து அசத்தியுள்ளார்.

இதற்கிடையில் சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பிரித்வி ஷா, முதல் போட்டியில் வாய்ப்பு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டார். முன்னதாக ஒருநாள் போட்டிகளிலும் மோசமான பார்ம் காரணமாக ஒதுக்கப்பட்டார். தற்போது மீண்டும் இந்திய அணியில் இடம் இடத்தை உறுதி செய்ய புது உத்வேகத்துடன் பிரித்வி ஷா உள்ளார். இன்னும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படாத நிலையில் இவரது சமீபத்திய ஃபார்ம் எப்படியும் அந்த அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதைக் குறி வைப்பதைக் காட்டுகிறது. இவர் சமீபத்தில் ஒரு சதம் தற்போது இரட்டை சதம் எனச் சிறந்த பார்மில் உள்ளார். மேலும் ஸ்ரேயஸ் ஐயர் இல்லாத நிலையில் மும்பை அணியை பிரித்வி ஷா வழி நடத்தி வருகிறார்.

Views: - 12

0

0