டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Author: Udhayakumar Raman
23 October 2021, 11:13 pm
Quick Share

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் ‘சூப்பர்-12’ சுற்று இன்று தொடங்கியுள்ளது. சூப்பர்-12 சுற்றில் குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

சூப்பர்-12 சுற்றின் முதல் நாளான இன்று அபுதாபியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 2-வது ‘சூப்பர் 12’ ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அந்த அணியில் எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது.

கிறிஸ் கெய்ல் அடித்த 13 ரன்களே அந்த அணியில் ஒர் வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. டி-20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி எடுத்த 3-வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதையடுத்து, 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 70 பந்துகள் மீதமிருந்த நிலையில், வெற்றியை ருசித்தது. துவக்க வீரர் ஜேசன் ராய் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 9 ரன், மொயீன் அலி 3 ரன், லிவிங்ஸ்டன் 1 ரன் எடுத்தனர். மறுமுனையில் கவனமாக விளையாடிய ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும், கேப்டன் மார்கன் ஆட்டமிழக்காமல் 7 ரன்களும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Views: - 502

0

0